தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு கோரிக்கை அட்டையுடன் வந்த இளைஞர்கள்
சாலையை சீரமைக்க வலியுறுத்தினர் தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு கோரிக்கை அட்டையுடன் வந்த இளைஞர்கள் வந்தனர்.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நேற்று நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுத்தனர். அந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில், கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டியை சேர்ந்த பெண்கள் சிலர், தங்களுக்கு சொந்த வீடோ, நிலமோ இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றும் மனு கொடுத்தனர்.
தமிழ்நாடு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராஜதுரை கொடுத்த மனுவில், "தேனி மாவட்டத்தில் பஞ்சமி நிலங்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. எனவே, பஞ்சமி நிலங்களை மீட்டு சொந்த வீடு இல்லாத மக்களுக்கு வழங்க வேண்டும். ஆக்கிரமிப்புக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பெரியகுளம் தாலுகா செயலாளர் பிரேம்குமார் தலைமையில், இளைஞர்கள் சிலர் கோரிக்கை அட்டையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், "தேவதானப்பட்டி பேரூராட்சி கக்கன்ஜி நகரில் சாலையை சீரமைக்க கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ரூ.19 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம் விடப்பட்டது. இதுவரை எந்த பணியும் நடக்கவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்களின் சிரமங்களை போக்கும் வகையில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.