'அ.தி.மு.க.வில் படித்த இளைஞர்கள் விரும்பி வந்து சேர்கின்றனர்'
அ.தி.மு.க.வில் படித்த இளைஞர்கள் விரும்பி வந்து சேர்கின்றனர் என்று இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் கூறினார்.
பரமக்குடி,
அ.தி.மு.க.வில் படித்த இளைஞர்கள் விரும்பி வந்து சேர்கின்றனர் என்று இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல், பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் பரமக்குடி கீர்த்தி மகாலில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் முத்தையா, முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனிமுத்து, எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் ஆர்.ஜி. ரத்தினம், மாவட்ட இணைச்செயலாளர் கவிதா சசிகுமார், மாவட்ட துணைச்செயலாளர்கள் பாதுஷா, பாலாமணி மாரி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சேது பாலசிங்கம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெய்லானி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணகுமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் உதுமான் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளரும் ராமநாதபுரம் நகர் கழக செயலாளருமான பால்பாண்டியன் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம் ஆலோசனைகள் வழங்கி பேசினார். மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி சிறப்புரையாற்றினார். இதில் பாசறை செயலாளர் பரமசிவம் பேசியதாவது:-
படித்த இளைஞர்கள் சேர்கிறார்கள்
கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துள்ளது. மக்களுக்கு தேவையான எந்த திட்டத்தையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. இந்த ஆட்சியின் மீது அதிருப்தியும், வெறுப்பும் தான் ஏற்பட்டுள்ளது. ஆகவே வரும் நாடாளுமன்ற தேர்தலிலும், 2026-ல் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றியை பெறும். தமிழகத்தின் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் அரியணையில் அமருவார். அ.தி.மு.க.வில் படித்த இளைஞர்கள் விரும்பி வந்து சேர்கின்றனர். காரணம், அ.தி.மு.க.வில் எல்லோருக்கும் பதவிகள் வழங்கப்படும். ஆனால் தி.மு.க.வில் அப்படி அல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசுகையில், தமிழ்நாட்டிலேயே ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் அதிகமாக புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளையும் தி.மு.க.ஆட்சியின் வேதனைகளையும் மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய அனைவரும் ஒன்றிணைந்து அயராது உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் முத்தையா, குப்புசாமி, லோகிதாசன், காளிமுத்து, மருதுபாண்டியன், அசோக் குமார், நகர் செயலாளர்கள் ஜமால், அர்ஜுனன், பொதுக்குழு உறுப்பினர்கள் நாகராஜன், குமரய்யா தேவர், மாவட்ட இலக்கிய அணி தலைவர் நல்லதம்பி, விவசாய அணி ஒன்றிய செயலாளர் தேர்த்தங்கல் பூமிநாதன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்பு ஒன்றியம் வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்து புதிய நிர்வாகிகள் சேர்ப்பதற்கான படிவங்கள் வழங்கப்பட்டது. பரமக்குடி நகர் ஜெயலலிதா பேரவை செயலாளரும் நகர் மன்ற உறுப்பினருமான வடமலையான் நன்றி கூறினார்.