'மண் காப்போம்' இயக்கத்தின் அடுத்தகட்டமாக 21 நாடுகளுக்கு ஜக்கி வாசுதேவ் மீண்டும் பயணம்
மண் காப்போம் இயக்கத்தின் அடுத்தகட்டமாக அமெரிக்கா உள்ளிட்ட 21 நாடுகளுக்கு ஜக்கி வாசுதேவ் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சென்னை,
மண்வளப் பாதுகாப்புக்காக 'மண் காப்போம்' என்ற இயக்கத்தை உருவாக்கி, தனது 65-வது வயதில் தனி ஆளாக 27 நாடுகளுக்கு மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்ட ஈஷா அமைப்பின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் நேற்று முன்தினம் தமிழகம் திரும்பினார்.
அதைத் தொடர்ந்து ஆதியோகியில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ் பேசியதாவது:-
இந்த 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணத்தில் நான் பல ஆபத்தான தருணங்களை கடந்துவந்துள்ளேன். உங்களுடைய அன்பு, ஆதரவினால் இந்த பயணம் நிறைவு அடைந்துவிட்டது. ஆனால் இனிமேல்தான் உண்மையில் கடினமான வேலை தொடங்க உள்ளது.
மீண்டும் பயணம்
'மண் காப்போம்' இயக்கத்தின் அடுத்தகட்டமாக, 4 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எனது பயணத்தை தொடங்க உள்ளேன். அடுத்த 1½ மாதத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்து அந்நாடுகள் மண் வளப் பாதுகாப்புக்கு சட்டங்கள் இயற்றுவதற்கு வலியுறுத்த உள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆதியோகி முன்பு நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.
மக்களுக்கு நன்றி
தனது மோட்டார்சைக்கிள் பயணம் வெற்றிபெற உறுதுணையாக இருந்த மக்களுக்கு நன்றி கூறி ஜக்கி வாசுதேவ் டுவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.