பருவத்தேர்வில் 3,200 மாணவ- மாணவிகளுக்கு பூஜியம் மதிப்பெண்


பருவத்தேர்வில் 3,200 மாணவ- மாணவிகளுக்கு பூஜியம் மதிப்பெண்
x

திருவள்ளுவர் பல்கலைக்கழக பருவத்தேர்வு முடிவில் குளறுபடி ஏற்பட்டு 3,200 மாணவ- மாணவிகளுக்கு பூஜியம் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதை கண்டித்து மாணவர்கள் பல்கலைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

தேர்வு முடிவில் குளறுபடி

திருவலத்தை அடுத்த சேர்க்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, தனியார் கல்லூரி என 79 உறுப்பு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் முதல் பருவ தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகின.

இதில் வேலூர் ஊரீஸ் கல்லூரியை சேர்ந்த மாணவ -மாணவிகளின் தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக கூறி நேற்று சேர்க்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பூஜியம் மதிப்பெண்

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் திருவலம் போலீசார் கல்லூரி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பல்கலைக்கழக பதிவாளர் விஜயராகவன் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சந்திரன் ஆகியோரிடம் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் பயிலும் 3,200 பேருக்கு பூஜியம் மதிப்பெண் வழங்கியுள்ளதாகவும், இந்த குளறுபடிக்கு காரணமான விடைத்தாள் திருத்தும் பணியில் பல்கலைக்கழகம் கம்ப்யூட்டர் கோடிங் சீட்டில் விதித்துள்ள விதிமுறைகளை பேராசிரியர்கள் சரியாக பின்பற்றாததாலும், அஜாக்கிரதையாக செயல்பட்டதாலும் இதுபோன்று குளறுபடி நடந்துள்ளது.

விளக்கம் கேட்டு நோட்டீஸ்

இவ்வாறு நடந்து கொண்ட சம்பந்தப்பட்ட கல்லூரி பேராசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் அதற்கு அவர்கள் பதில் அளிக்காத பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழக பதிவாளர் விஜயராகவன் தெரிவித்துள்ளார்.


Next Story