சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 அதிகாரிகள்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 பேர் சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ளது ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
வாஷிங்டன்
அமெரிக்காவைச் சேர்ந்த, இந்தியஸ்போரா நிறுவனம், சர்வதேச நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக பணியாற்றும் இந்திய வம்சாவளியினர் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட 11 நாடுகளிலிருந்து செயல்படும் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 பேர் பணியாற்றுகின்றனர்.இதில், இந்தியாவில் இருந்து பிற நாடுகளில் குடியேறியோர் மற்றும் அமெரிக்கா, எத்தியோப்பியா, இங்கிலாந்து, உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் பிறந்த இந்திய வம்சாவளியினரும் அடங்குவர்.
இவர்கள் தலைமையில் செயல்படும் நிறுவனங்கள் ஆண்டுக்கு 75 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் ஈட்டுவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.இந்நிறுவனங்களில் 36 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். மேலும், இந்நிறுவனங்கள் ஆண்டுக்கு 23 சதவீத வருவாயை பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கி வருகின்றன.
இது அமெரிக்க பங்குச்சந்தையில் 'எஸ் அண்டு பி' குறியீட்டில் உள்ள 500 நிறுவனங்கள் அளித்த 10 சதவீத வருவாயை விட அதிகமாகும்.இந்திய வம்சாவளி தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலில், ஐந்து பெண்கள் இடம்
பெற்றுள்ளனர்.இது, பார்ச்சூன் இதழின் டாப் 1000 நிறுவனங்களில் இடம் பெற்றுள்ள 61 பெண் தலைமை செயல் அதிகாரிகளுடன் ஒப்பிடும்போது, விகிதாச்சார அடிப்படையில் அதிகம்.
இந்த பட்டியலில் ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரி சுந்தர் பிச்சை, மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் அஜய் பங்கா, வெர்டெக்ஸ் பார்மா நிறுவனத்தின் ரேஷ்மா கேவல்ரமணி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story