கொரோனா உயிர்ப்பசி தீர்வது எப்போது? -உலக அளவில் பலி எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது


கொரோனா உயிர்ப்பசி தீர்வது எப்போது? -உலக அளவில் பலி எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது
x
தினத்தந்தி 7 Jun 2020 10:55 PM GMT (Updated: 7 Jun 2020 10:55 PM GMT)

உலக அளவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள உயிர்ப்பலி எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. கொரோனாவின் உயிர்ப்பசி தீர்வது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.

வாஷிங்டன், 

உலக வரலாற்றில் சமீப காலத்தில் எந்தவொரு தொற்றுநோயும் கொரோனாவைப்போல மனித உயிர்களை வாரிக்கொண்டு போனது இல்லை என்பது நிதர்சனமான உண்மையாக அமைந்துள்ளது.

கொரோனா வைரஸ் உயிர்ப்பலிகள் மனித குலத்தை நடுங்க வைக்கின்றன.

கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் முதல் முதலாக தோன்றிய கொரோனா வைரஸ் 1 லட்சம் பேரை பலிகொள்வதற்கு 4 மாதங்கள் எடுத்துக்கொண்டது.

அடுத்து 2 லட்சம் என்று இரட்டிப்பு ஆவதற்கு 15 நாட்களை கொரோனா வைரஸ் எடுத்துக்கொண்டது. அதன்பின்னர் பலி இன்னும் வேகம் எடுத்து 3 லட்சம் என்றானது. நேற்று அது 4 லட்சத்தையும் கடந்து விட்டது.

நேற்று மாலை நிலவரப்படி உலக அளவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 200-ஐ கடந்து விட்டது என அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் கூறியது.

உலகமெங்கும் கொரோனாவுக்கு பலியான 4 பேரில் ஒருவர் அமெரிக்கர் என்று சொல்லக்கூடிய வகையில், அமெரிக்காவில் உயிர்ப்பலி அதிகளவில் உள்ளது. உலகமெங்கும் பலி 4 லட்சத்தைக் கடந்தபோது அமெரிக்காவில் உயிரிழப்பு 1 லட்சத்து 9 ஆயிரத்தை கடந்து விட்டது.

இதன்மூலம் கொரோனா வைரஸ் உயிர்ப்பலியில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடம் வகித்து வருகிறது.

அந்த நாட்டில் அதிகபட்சமாக நியுயார்க் மாகாணத்தில்தான் அதிகபட்சமாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் அதன் அண்டை மாகாணமான நியுஜெர்சி அமைந்துள்ளது. அங்கு 12 ஆயிரத்துக்கு அதிகமானோர் கொரோனாவால் இறந்துள்ளனர். இவ்விரு மாகாணங்கள் மட்டுமே 5 இலக்க எண்ணிக்கையை அடைந்துள்ளன.

முதல் இடம் அமெரிக்காவுக்கு என்கிறபோது, கொரோனா உயிர்ப்பலியில் 2-வது இடம் இங்கிலாந்துக்கு கிடைத்துள்ளது. அங்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கிறார்கள்.

3-ம் இடத்தில் பிரேசில் இருக்கிறது. அங்கு பலியானவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்தை எட்டுகிறது. 4-ம் இடம் வகிக்கிற இத்தாலியில் மொத்தம் 33 ஆயித்து 800-க்கும அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

5-வது இடத்தில் பிரான்ஸ் உள்ளது. இந்த நாட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஸ்பெயின் 27 ஆயிரத்துக்கு அதிமான உயிர்ப்பலியுடன் 6-வது இடத்தில் உள்ளது. 13 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட உயிர்ப்பலியுடன் மெக்சிகோ 7-வது இடத்தில் இருக்கிறது.

பெல்ஜியம் 9 ஆயிரத்து 600 பேருடன் 8-ம் இடத்தில் இருக்கிறது. 8,600-க்கு மேற்பட்டவர்களுடன் ஜெர்மனி 9-வது இடத்தில் உள்ளது.

10-வது இடம் ஈரான் வசம் உள்ளது. அங்கு 8,200-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

உலக அளவில் கொரோனா பலியில் முதல் 10 இடங்களில் இந்தியா இல்லை என்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது. அதே நேரத்தில் கொரோனாவின் உயிர்ப்பசி தீர்வது எப்போது என்ற கேள்வி உலகமெங்கும் எதிரொலிக்கத்தொடங்கி இருக்கிறது.


Next Story