சிங்கப்பூர் பொதுத்தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது
சிங்கப்பூரில் நடந்த பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது.
சிங்கப்பூர்,
சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் தலைமையிலான மக்கள் செயல் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சிங்கப்பூரிலும் வேகமாக பரவுகிறது. இதன் காரணமாக அந்த நாட்டில் வேலை இழப்பு மற்றும் பொருளாதார சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனிடையே தனது ஆட்சிக் காலம் முடியும் 10 மாதங்களுக்கு முன்பே பொதுத்தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் லீ கடந்த மாதம் அறிவித்தார். அதன்படி கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிங்கப்பூரில் நேற்று முன்தினம் பொதுத்தேர்தல் நடந்தது.
கொரோனா வைரஸ் காரணமாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 880-ல் இருந்து 1,100 ஆக அதிகரிக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் குறித்த பயம் இருந்த போதிலும் மக்கள் ஆர்வமுடன் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
முதியவர்கள், இளைஞர்கள், வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்கள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நேரங்கள் ஒதுக்கப்பட்டு, வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். வாக்காளர்கள் அனைவரும் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து உரிய பாதுகாப்புடன் வாக்கு சாவடிக்கு சென்று வாக்களித்தனர்.
காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 8 மணிக்கு முடிவடைந்தது. அதனை தொடர்ந்து உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதில் பிரதமர் லீ சியென் லூங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி மொத்தமுள்ள 93 இடங்களில் 83 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
அந்த கட்சி மொத்தம் 61.24 சதவீத வாக்குகளைப் பெற்றது. எனினும் இது கடந்த 2015-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளை (69.9) விட குறைவு ஆகும்.
கடந்த 1950-ம் ஆண்டு முதல் நடந்து வரும் பொதுத்தேர்தல்களில் ஆளும் மக்கள் செயல் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி முன்னெப்போதும் இல்லாத வகையில் 10 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அந்த கட்சியின் தலைவரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான பிரீத்தம் சிங் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்று உள்ளார்.
இதனிடையே தேர்தல் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் லீ “பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்ததற்கு அனைத்து மக்களுக்கும் நன்றி. ஓட்டு விகிதம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும், எங்கள் கட்சிக்கு மக்களிடம் ஆதரவு உள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. கொரோனா நெருக்கடி காலத்தில், மக்கள் எதிர்நோக்கிய வலி, பதற்றத்தையும் முடிவுகள் காட்டுகிறது“ எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் “நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை கையாள்வதற்கும் சிங்கப்பூரை நெருக்கடி மற்றும் அதற்கு அப்பால் பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கும் இந்த வெற்றியை பொறுப்புடன் பயன்படுத்துவோம்“ என உறுதி அளித்தார்.
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்று உள்ள பிரீத்தம் சிங் தேர்தல் முடிவுகள் குறித்து கூறுகையில் “இன்றைய முடிவுகள் நேர்மறையானவை. மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம். செய்ய நிறைய வேலை இருக்கிறது. தொழிலாளர் கட்சி சிங்கப்பூருக்கு சேவை செய்ய உறுதி கொண்டுள்ளது என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்“ எனக் கூறினார்.
Related Tags :
Next Story