சந்தோஷம் தரும் சந்தோஷி மாதா விரதம்


சந்தோஷம் தரும் சந்தோஷி மாதா விரதம்
x
தினத்தந்தி 20 Dec 2016 2:30 AM GMT (Updated: 19 Dec 2016 10:54 AM GMT)

விநாயகர் பெரும்பாலும் பிரம்மச்சாரியாகவே அறியப்படுகிறார். ஆனால் அவருக்கும் திருமணமாகி இரு மனைவியர், பிள்ளைகள் இருப்பதாக சில புராணங்கள் கூறுகின்றன. விநாயகப் பெருமானுக்கு சித்தி (ஆன்மிக சக்தி), புத்தி (அறிவு) என்ற இரு மனைவியர்களும், அவர்களுக்கு லாபம், சுபம் ஆகிய

விநாயகர் பெரும்பாலும் பிரம்மச்சாரியாகவே அறியப்படுகிறார். ஆனால் அவருக்கும் திருமணமாகி இரு மனைவியர், பிள்ளைகள் இருப்பதாக சில புராணங்கள் கூறுகின்றன. விநாயகப் பெருமானுக்கு சித்தி (ஆன்மிக சக்தி), புத்தி (அறிவு) என்ற இரு மனைவியர்களும், அவர்களுக்கு லாபம், சுபம் ஆகிய இரு மகன்கள் இருப்பதாகவும் அவை எடுத்துரைக்கின்றன. ஒரு முறை விநாயகப்பெருமான், தனது மனைவியர் மற்றும் மகன்களுடன் பூலோகம் வந்தபோது, அங்கு ரக்ஷாபந்தன் என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பெண்கள் அனைவரும் தங்கள் சகோதரர்களுக்கு கயிறு கட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதனைக் கண்ட விநாயகரின் மகன்கள் இருவரும், தங்களுக்கு கயிறு கட்ட, ஒரு சகோதரி இல்லையே! என்று வருந்தினர். பின்னர் தங்களுக்கு ஒரு சகோதரி வேண்டும் என்று தந்தையான விநாயகரிடம் வேண்டினர். விநாயகர், தன்னுடைய மகன்களுக்கு அவர்கள் கேட்ட வரத்தை அளித்தார். அதன்படி விநாயகருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘சந்தோஷி’ (சந்தோஷம்) என்று பெயரிட்டார். அவரே ‘சந்தோஷி மாதா’. அந்தக் குழந்தை பார்வதியின் சக்தியையும், லட்சுமிதேவியின் செல்வத்தையும், சரஸ்வதி தேவியின் கல்விச் சிறப்பையும் பெற்று திகழ்ந்தது.

வேண்டுபவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கக் கூடியவர், என்பதால் இந்த அன்னைக்கு ‘சந்தோஷி மாதா’ என்று பெயர் வந்தது. சந்தோஷி மாதா அவதரித்தது ஒரு வெள்ளிக்கிழமை ஆகும். எனவே ‘வெள்ளிக்கிழமையில் சந்தோஷி மாதாவை நினைத்து விரதம் இருப்பவர்களுக்கு, விநாயகரின் அருளும் கிடைக்க வேண்டும்’ என்று நாரதர், விநாயகப் பெருமானிடம் வேண்டிக்கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன.

விரதம் இருக்கும் முறை

இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையில் விரதத்தைத் தொடங்க வேண்டும். தொடர்ச்சியாக 11 வெள்ளிக்கிழமைகள் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் நினைத்த காரியம் நிறைவேறும். இல்லத்தில் மகிழ்ச்சி குடிகொள்ளும். விரதம் இருக்கும் நாளன்று, வீட்டையும், பூஜை அறையையும் சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறைக்குள் சுத்தமான பலகை வைத்து, அதன் மேல் கோலம் போட்டு, அதற்கு மேலே கும்பம் வைக்க வேண்டும். சந்தோஷி மாதா படத்தையும், சந்தனத்தில் பிடித்து வைக்கப்பட்ட பிள்ளையாரையும் வைப்பதோடு, படத்துக்கும், கும்பத்துக்கும் மாலை போட்டு, அருகில் குத்துவிளக்கும் ஏற்றிவைக்க வேண்டும்.

நைவேத்தியமாக சந்தோஷி மாதாவுக்கு பிடித்தமான கொண்டைக்கடலை, வெல்லம் வைத்து வழிபடலாம். விரதம் இருப்பவர்கள், விரத நாள் அன்று புளிப்பு சேர்க்கக்கூடாது. தொடர்ந்து நாம் நினைத்த காரியம் நடைபெற வேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டு, விநாயகருக்கும், சந்தோஷி மாதாவுக்கும் பூஜை செய்து வணங்க வேண்டும். பின்னர் கும்பத்தில் உள்ள நீரைத் தீர்த்தமாகப் பயன்படுத்த வேண்டும். நினைத்த காரியம் நிறைவேறும் வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த விரதத்தை தொடர்ச்சியாக அனுஷ்டிப்பது சிறப்பு தரும். விரதம் இருப்பவர்கள் யாருக்கும், தட்சணை கொடுக்கக்கூடாது.

சென்னையில் ஆலயம்

சென்னை விருகம்பாக்கம் மார்க்கெட் அருகில், பரிபூரண விநாயகர் ஆலயம் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் சந்தோஷி மாதாவிற்கு தனியாக சிறிய சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. விநாயகப்பெருமானின் புதல்வியாக சந்தோஷிமாதா வணங்கப்படுகிறாள். பத்மாசனத்தில் அமர்ந்து, மேல் இரு கரங்களில் கத்தியையும், சூலத்தையும் தாங்கியிருக்கிறார். கீழ் இரு கரங்களில் அபய முத்திரையையும், பொற்கிண்ணத்தையும் ஏந்தி தரிசனம் அளிக்கிறாள்.

இந்த அன்னையிடம் நேர்ந்து கொண்டு வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து, புளி சேர்க்காமல் சமையல் செய்து எட்டு சிறுவர்களுக்கு உணவளித்தால், எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். ரக்ஷாபந்தன் திருவிழா, லட்சார்ச்சனைப் பெருவிழா, விநாயக சதுர்த்தி, நவராத்திரி போன்ற நாட்களில், இந்த ஆலயத்தில் உள்ள சந்தோஷி மாதாவிற்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. பெண்கள் தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து, சந்தோஷி மாதாவை வேண்டிக்கொண்டால் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறலாம்.

சென்னை தவிர, கோயம்புத்தூர், திருச்சி போன்ற பகுதிகளிலும் சந்தோஷி மாத£விற்கு ஆலயம் உள்ளது. இந்தியாவில் வட மாநிலங் களில் இந்த அன்னைக்கு புகழ்பெற்ற ஆலயங்கள் அமைந்துள்ளன.

Next Story