அறிவோம் இஸ்லாம் : 59. நபிகளார் மரணம்


அறிவோம் இஸ்லாம் : 59. நபிகளார் மரணம்
x
தினத்தந்தி 3 Jan 2017 12:00 AM GMT (Updated: 2 Jan 2017 1:54 PM GMT)

நபிகளாருக்கு ஏற்பட்ட கடுமையான நிலைமையைக் கண்ட பாத்திமா (ரலி) அவர்கள், ‘‘என் தந்தைக்கு ஏற்பட்ட கஷ்டமே’’ என்று வேதனைப்பட்டார்கள். ‘‘உன் தந்தைக்கு இன்றைக்குப் பிறகு கஷ்டமே இருக்காது’’ என்று நபிகளார் ஆறுதல் கூறினார்கள்.

- பாத்திமா மைந்தன்

பிகளாருக்கு ஏற்பட்ட கடுமையான நிலைமையைக் கண்ட பாத்திமா (ரலி) அவர்கள், ‘‘என் தந்தைக்கு ஏற்பட்ட கஷ்டமே’’ என்று வேதனைப்பட்டார்கள். ‘‘உன் தந்தைக்கு இன்றைக்குப் பிறகு கஷ்டமே இருக்காது’’ என்று நபிகளார் ஆறுதல் கூறினார்கள்.

நபிகளார் தன் பேரன்மார்கள் ஹசன், ஹுசைனை வர வழைத்து அவர்களை முத்தமிட்டார்கள். அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுமாறு பாத்திமாவை அறிவுறுத்தினார்கள். பின்னர் மனைவிமார்களை அழைத்து அவர்களுக்கு உபதேசமும், அறிவுரையும் நல்கினார்கள்.

சற்று நேரத்தில் ஆயிஷாவின் சகோதரர் அப்துல் ரஹ்மான் (ரலி) வந்தார்கள். அவர் கையில் பல் துலக்கும் ஈரமான (பேரிச்சங்)குச்சி இருந்தது. அந்தக் குச்சியால் நபிகளார் பல் துலக்கி முடித்தவுடன், தம் கையை உயர்த்தினார்கள். அவர்களது பார்வை முகட்டை நோக்கியது. அவர்களது உதடுகள் அசைந்தன. அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை ஆயிஷா செவி தாழ்த்திக் கேட்டார்கள்.

நபிகளார், ‘இறைவா! என்னை மன்னித்து எனக்குக் கருணை புரிவாயாக! (சொர்க்கத்தில்) என்னை (உயர்ந்த) தோழர்களுடன் சேர்த்தருள்வாயாக!’’ என்று கூறினார்கள்.

அப்போது உயர்த்திய அவர்களின் கைகள் சாய்ந்தன. உயர்ந்தோனிடன் அவர்கள் சென்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்களின் முகவாய்க்கும் நெஞ்சுக்கும் இடையே தலை சாய்ந்தபடி நபிகளார் மரணம் அடைந்தார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் – நாம் இறைவனிடம் இருந்தே வந்தோம்; அவனிடமே செல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம்.)

ஹிஜ்ரி 11–ம் ஆண்டு ரபியுல் அவ்வல் பிறை 12 திங்கட் கிழமை முற்பகல் முடியும் நேரத்தில் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அப்போது நபிகளாருக்கு 63 வயது 4 நாட்கள் ஆகி இருந்தன.

நபிகளார் மரணம் அடைந்த செய்தி எங்கும் பரவியது. ஒளி விளக்கு அணைந்ததால், மதீனா மாநகரம் இருண்டது.  

செய்தி கேட்ட உமர் (ரலி) அவர்கள் எழுந்து நின்று, ‘‘சில நயவஞ்சகர்கள் நபி (ஸல்) இறந்து விட்டதாக நினைக்கின்றனர். நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் மரணிக்கவில்லை. நபி மூஸா (அலை) அவர்கள் இறைவனைச் சந்திக்கச் சென்று நாற்பது நாட்கள் தமது சமூகத்தாரை விட்டு மறைந்திருந்தபோது மூஸா மரணம் அடைந்து விட்டதாக எண்ணினார்கள். ஆனால் நபி மூஸா திரும்பி வந்தார்கள். அவ்வாறே நபிகளாரும் இறைவனைச் சந்திக்க சென்று இருக்கிறார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) நிச்சயம் திரும்ப வருவார்கள். தான் மரணித்து விட்டதாகக் கூறியவர்களின் கைகளையும், கால்களையும் வெட்டுவார்கள்’’ என்று கூறினார்கள்.

இந்த சமயத்தில் அபூபக்கர் (ரலி) அவர்கள் ‘மஸ்ஜிதுந் நபவி’ (நபிகளார் கட்டிய மசூதி) பள்ளிவாசலில் இருந்து சற்று தூரத்தில் உள்ள வீட்டில் தங்கி இருந்தார்கள். இந்த துக்கமான செய்தியைக் கேட்டவுடன், தனது குதிரையில் ஏறி அங்கு வந்தார்கள். யாரிடமும் பேசாமல் நபிகளாரைக் காண்பதற்காக ஆயிஷாவின் அறை நோக்கி நடந்தார்கள்.

நபிகளாரின் உடல் யமன் நாட்டு ஆடை ஒன்றால் போர்த்தப்பட்டிருந்தது. நபிகளாரின் முகத்தில் இருந்த துணியை நீக்கி, அவர்களின் முகத்தின் மீது தன் தலையைக் கவிழ்த்து அவர்களை அபூபக்கர் முத்தமிட்டு அழுதார்கள். ‘‘என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ் தங்களுக்கு இரண்டு மரணத்தைத் தரமாட்டான். அல்லாஹ் உங்களுக்கு விதித்த முதல் மரணத்தையே நீங்கள் அடைந்து கொண்டீர்கள்’’ என்று கூறினார்கள்.

பின்னர் அறையில் இருந்து வெளியேறி பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அங்கு உமர் (ரலி) மக்களிடம், ‘நபிகளார் இறக்கவில்லை’ என்று கோபமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். இதைக் கன்டதும் ‘‘உமரே! அமருங்கள்’’ என்று அபூபக்கர் கூறியும் அவர் உட்கார மறுத்து விட்டார்.

அபூபக்கர் சொற்பொழிவு மேடையில் ஏறி, ‘‘நபி (ஸல்) அவர்கள் மரணம் அடைந்து விட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிருடன் இருப்பவன்; மரணிக்க மாட்டான்’’ என்று கூறினார்கள்.

தொடர்ந்து, ‘‘முகம்மது (நபி) ஒரு தூதரேயன்றி (இறக்காமல் இருக்கக் கூடிய இறைவன்) அல்ல. அவருக்கு முன்னரும் (இவ்வாறே) பல தூதர்கள் சென்றிருக்கின்றனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் புறங்காட்டிச் சென்று விடுவீர்களோ? (அவ்வாறு) எவரேனும் புறங்காட்டி சென்று விட்டால் அதனால் அவன், அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டம் உண்டாக்கி விடமாட்டான். நன்றி அறிபவர்களுக்கு அல்லாஹ் அதி சீக்கிரத்தில் (நற்)கூலியைத் தருவான்’’ (திருக்குர்ஆன்–3:144) என்ற இறை வசனத்தை எடுத்துச் சொன்னார்கள்.

இதைக் கேட்டதும் அங்கு கூடி இருந்த மக்களும் அந்த இறை வசனத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக்கொண்டே இருந்தார்கள்.

நபிகளாரை அடக்கம் செய்வதற்கு முன்னதாக ‘கலீபா’வை (ஜனாதிபதி) நியமிக்கும் பணி நடைபெற்றது. ஒருமனதாக அபூபக்கர் (ரலி) அவர்கள் கலீபாவாக தேர்வு செய்யப்பட்டார்கள். இந்தப் பணியில் திங்கட்கிழமை கழிந்தது. அதுவரை நபிகளாரின் உடல் இருந்த அறையை அவரது குடும்பத்தார் மூடி வைத்திருந்தனர்.

மறுநாள் செவ்வாய்க்கிழமை பகலில், இலந்தை இலை கலந்த நீரால் மும்முறை குளிப்பாட்டினார்கள். நபிகளாரை வெள்ளை நிற யமன் நாட்டு பருத்தி ஆடையினால் (கபன்) போர்த்தினார்கள். அதில் தைக்கப்பட்ட சட்டையோ, தலைப்பாகையோ எதுவும் இல்லை.

நபிகளாரை எங்கு அடக்கம் செய்வது என்ற கேள்வி எழுந்தது. அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள், ‘‘இறைத்தூதர் களின் உயிர் எங்கு பிரிகிறதோ அங்குதான் அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள் என்று நபி (ஸல்) கூற நான் கேட்டிருக்கிறேன்’’ என்றார்கள்.

இதன்படி நபிகளார் மரணித்த இடத்தில் உள்ள விரிப்பை அகற்றி அங்கே குழி தோண்டினார்கள். இதன்பிறகு குடும்பத்தாரும், நபித்தோழர்களும், பெண்களும், சிறுவர்களும் பத்து பத்து பேர்களாகச் சென்று நபிகளாரின் அறையில் ‘ஜனாஸா’ தொழுகையை (இறந்தோருக்காக தொழுவிக்கப்படும் இறுதித் தொழுகை) தொழுதார்கள். பின்னர் நபிகளாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

(தொடரும்)

Next Story