மணப்பேறு அருளும் முகப்பேர் மகப்பேறீஸ்வரர்


மணப்பேறு அருளும் முகப்பேர் மகப்பேறீஸ்வரர்
x
தினத்தந்தி 7 Feb 2018 7:29 AM GMT (Updated: 7 Feb 2018 7:29 AM GMT)

மகப்பேறீஸ்வரர் கோவில் என அழைக்கப்படும் இந்தத் திருத்தலம் கல் திருப்பணி ரீதியாக 1,200 ஆண்டுகள் தொன்மையானது.

ரிபூரண பரம்பொருளாம் பெருங்கருணைத் தடங்கடலாகிய சிவபெருமான், ஆன்மாக்கள் மீது கொண்டுள்ள எல்லை இல்லாப் பெருங்கருணையாலே, காணாத அருவினுக்கும் உருவினுக்கும் நிகழ்குறியாம், சிவலிங்கத் திருவுருக்கொண்டு எழுந்தருளி இருக்கின்ற தலங்கள் பலவற்றுள் முகப்பேரும் ஒன்று.

மகப்பேறீஸ்வரர் கோவில்

சென்னை, அண்ணாநகர் அடுத்து திருமங்கலம் கலெக்டர் நகர் பாதையில் அடுத்துள்ளது முகப்பேர் பகுதி. இங்கு மங்கள் ஏரி அருகே மரகதவல்லி சமேத மார்க்கண்டேசுவரர் ஆலயம் உள்ளது. மகப்பேறீஸ்வரர் கோவில் என அழைக்கப்படும் இந்தத் திருத்தலம் கல் திருப்பணி ரீதியாக 1,200 ஆண்டுகள் தொன்மையானது. எனினும் தல புராண ரீதியாக, பல ஆயிரம் ஆண்டு களுக்கு முன் மகாலட்சுமி, சப்த ரிஷிகள் ஆகியோர் ஈசனைப் பூஜித்த தலமிது.

காஞ்சி மண்டலத்தை ஆட்சிபுரிந்த சம்புவராயர் வம்ச குறுநில மன்னர்கள் தொண்டை மண்டலத்தில் பல திருக்கோவில்களை நிறுவியும், பணி செய்தும் சமயத்தொண்டு புரிந்துவந்தனர். அவ்வரசர்களுள் வென்று மண்கொண்டான், ராஜநாராயணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர் களின் வம்சத்தில் வந்த சம்புவராயன் என்ற அரசன் சிறந்த சிவபக்தன்.

அவன் திருமணமாகி நீண்டகாலம் புத்திரபாக்கியம் இன்மையால் வருந்தினான். ஒருநாள் இரவில் அரசன் கனவில் தோன்றிய சிவபெருமான் ஷீர நதிக் கரையில் சிவ-விஷ்ணு ஆலயம் நிர்மாணித்து வழிபட்டால் வம்சம் தழைக்கும் என்று கூறி மறைந்தார். அதன்படி ஈசன் குறிப்பிட்ட ஷீர நதி என்றழைக்கப்பட்ட பாலாற்றின் கரையில் நான்கு ஏக்கர் நிலப்பரப்பில், நான்கு ராஜகோபுரங்களுடன் பிரமாண்டமான சிவ-விஷ்ணு ஆலயத்தை எழுப்பினான். நித்ய பூஜைகளுக்கும் இதர கைங்கர்யங்களுக்கும் ஏராளமான நிலங்கள் எழுதி வைத்தான். அம்மையையும் அப்பனையும் மன முருகி வேண்டினான். மறுவருடமே ஈசனின் கருணையால் புத்திர பாக்கியம் பெற்றான் சம்புவராயன். தமக்கு வாரிசு யோகம் அளித்த ஈசன் எழுந்தருளியிருக்கும் ஷேத்திரத்திற்கு மகப்பேறு, சந்தானமங்கலம் ஆகிய பெயர்களை இட்டு மகிழ்ந்தான். குழந்தைக்கு மல்லிநாதன் என்று பெயர் சூட்டினான். மல்லிநாதனும் தந்தையைப்போல சிவபக்தியில் திளைத்தான். தம் தந்தைக்கு அருளிய மார்க்கண்டேசுவரர் கோவிலுக்கு விரிவாக்கப்பணிகள் செய்து ஆனந்தம் கொண்டான். காலப்போக்கில் மகப்பேறு என்ற பெயர் மருவி முகப்பேர் என்றானது.

அன்னியர் படையெடுப்பாலும் வேறுபல காரணங்களாலும் இவ்வாலயம் பராமரிப்பு குன்றி, மண்டபங்களும் பிரகார வீதிகளும் முழுவதும் வீழ்ந்து அழிந்துவிட்டன. இந்நிலையில் 1992-ம் ஆண்டு, வெறும் மூன்றுவீடுகள் மட்டுமே இருந்த இப்பகுதியில் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டியுள்ளனர். அப்போது பூமிக்கடியிலிருந்த புற்றின்மீது பால்ஊற்றிக் கரைத்துப் பார்த்தபோது சிவலிங்கம், அம்பாள் உள்பட பல விக்ரகங்கள் சேதமடையாமல் கிடைத்துள்ளன. அவற்றைக்கொண்டு அதே இடத்தில் புதிதாகக் கோவில் எழுப்பப்பட்டது. பூமிக்கடியில் கிடைத்த சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தபோது, லிங்கம் அருகில் ஸ்தம்பம்போல ஒளி தோன்றி சிறிதுநேரம் நிலைத்திருந்ததாம். அதன் புகைப்படம் இன்றும் கோவிலில் உள்ளது.

பாணலிங்கம்

இந்த சிவலிங்கம் சுயம்பு மூர்த்தியான-சாளக்கிராமத்திலான பாணலிங்கம் ஆகும். இயற்கையிலேயே இறையம்சம் பொருந்தியதாக உள்ள பல பொருட்களுள் பாணலிங்கமும் ஒன்று. ஆயிரம் கல் சிவலிங்கத்துக்கு ஒரு ஸ்படிக லிங்கம் சமம் என்றும், 12 லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்கு ஒரு பாணலிங்கம் சமம் என்றும் புராணங்களிலும் சாஸ்திரங்களிலும் கூறப்பட்டுள்ளன.

காசியப மகரிஷியின் பேரன் பிரகலாதன். அவனுடைய பேரன் பாணாசுரன். ராவணனைவிட சிறந்த சிவபக்தன் பாணாசுரன். தாண்டவத்தின்போது 1000 கரங்களால் மிருதங்கம் வாசித்து ஈசனைக் கவர்ந்தான். சிரஞ்சீவித் தன்மை பெற்றவன். அனைத்து உலகையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவந்து ஆளும் வல்லமையைப்பெற விரும்பினான் பாணாசுரன்.

இந்த அரிய வரத்தைப் பெறுவதற்காக, யமுனை நதிக்கரையில் ஈசனை எண்ணித்தவம் புரிந்தான். அப்போது சிவபெருமானிடம், பூஜிக்க 14 கோடி லிங்கங்கள் வேண்டிப் பெற்றான். அவையே சாளக்கிராமங்கள். ஒருநாள் வழிபட்ட லிங்கங்களை நதியில் இட்டுவிட்டு மறுநாள் வேறு லிங்கங்களை வைத்து வணங்கி வந்தான். ஆற்றில் இட்ட இந்த லிங்கங்கள் சிறிதுகூட சேதமின்றி தகதகவென ஜொலித்தன. தாம் வழிபட்ட இந்த லிங்கங்களை, பாணாசுரன் புண்ணிய தீர்த்தங்கள் கொண்ட வழிபாட்டுத்தலங்களில் ஸ்தாபித்தும் வழிபட்டான். மந்திரங்கள் கொண்டு சிவபூஜை செய்ததால் இந்த லிங்கங்கள் எக்காலத்திலும் சிவ சாநித்தியம் கொண்டிருப்பதாக ஐதீகம். பாணாசுரன் வழிபட்ட சின்ன உளுந்து முதல் ஒரு முழம் வரையுள்ள இந்த சிவலிங்கத் திரு மேனிகளே ‘்பாணலிங்கம்’ என அழைக்கப்படுகிறது. இத்தகைய ஆற்றல்மிக்க பாணலிங்கம் முகப்பேரிலும் கிடைக்கப் பெற்றுள்ளது.

சந்தான கவுரி

இத்தல அன்னை ‘மரகதவல்லி’, ‘சந்தான கவுரி’ ஆகிய திருநாமங்களால் அழைக்கப்பெறுகிறாள். உரிய பருவம் வந்தும் திருமணமாகாமல், தடைபட்டுக்கொண்டிருந்தால் ஐந்து திங்கட்கிழமை இங்கு வந்து, ஐந்து தீபங்கள் வீதம் அம்பாள் சன்னிதியில் ஏற்றி வழிபட்டால் தடைகள் நீங்கி உடனே திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. திருமணமாகி நீண்டகாலம் குழந்தைப்பேறு இல்லாத தம்பதியர்கள் உணவருந்தாமல் இங்குவந்து, அம்பாளுக்கு 11 அல்லது 21 என்ற எண்ணிக்கையில் எலுமிச்சம்பழங்களை மாலையாகக் கோர்த்து அணிவித்து வழிபட வேண்டும். கணவரின் ஜென்ம நட்சத்திரத்தன்று தொடங்கி இவ்வாறு ஐந்து வாரம் வழிபடுவோருக்கு, புத்திர தோஷம் நீங்கி மகப்பேறு வாய்க்கும் என்கிறார்கள்.. அம்பாள் வரதஹஸ்த நாயகியாக வீற்றிருப்பதால், பக்தர்களின் எல்லா வேண்டுதல்களையும் உடனே நிறைவேற்றிவிடுகிறாள் என்பது ஐதீகம்.

வழிகாட்டும் ஈசன்

மார்க்கண்டேய முனிவர் வழிபட்டுள்ளதால் இத்தல நாயகன் மார்க்கண்டேசுவரர் என அழைக்கப்பெறுகிறார். இங்கு ஈசனை வழிபடுவோர் அனைவருக்கும் சிறந்த வழிகாட்டியாக, நல்ல நிலைக்கு வர அருள் பாலிப்பதால் மார்க்கண்டேசுவரர் என்னும் திருநாமம் ஏற்பட்டது என்பது இக்கோவிலுக்கு வந்து வணங்கிச்சென்ற பக்தர்களின் நம்பிக்கை. சித்தேஸ்வரர், சிதானந்தர் ஆகிய திருநாமங்களும் இந்த இறைவனுக்கு உண்டு.

மார்க்கண்டேசுவரரை வழிபடுவோருக்கு எமபயம் நீங்கும், நோய் விலகும், உடல்பலம் பெறும், ஆயுள்பலம் அதிகரிக்கும், புண்ணியம் அதிகரிக்கும், மன அமைதி கிட்டும், தொழில் விருத்தியடையும், பதவி உயர்வு, வேலை வாய்ப்பு கிட்டும். பிரார்த்தனை செய்து அவரவர் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் வேண்டும் வரம் தருகிறார் என்கிறார்கள்.

பவுர்ணமி தோறும் மாலை ஆறு மணிக்கு, 11 வகை சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. குபேர சம்பத்து வேண்டியும் வழிபடலாம். அண்மையில் பூமிக்கடியிலிருந்து கிடைக்கப்பெற்ற சதுரவடிவ ஆவுடையார் பீடத்தில், வருகிற 11-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிரதிஷ்டை மற்றும் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இங்குள்ள வீணா தட்சிணாமூர்த்தியை வழிபடும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். சுமார் மூன்றடி உயரத்தில் சித்திர குப்தர் விக்ரகமும் இங்குள்ளது. கேதுவுக்கு பிரீதியாக கொள் தீபம் ஏற்றி சித்திர குப்தரை வழிபடலாம். தினமும் காலை 7 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டைக்குச் செல்லும் வழியில், கலெக்டர் நகருக்கு அடுத்துள்ள கோல்டன் பிளாட் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து சிறிது தூரம் சென்றால் மங்கள் ஏரிப்பூங்கா அருகே இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. 

-கீழப்பாவூர் கீ.ஸ்ரீமுருகன்

Next Story