ஆயுளைச் சொல்லும் எட்டாம் பாவம்


ஆயுளைச் சொல்லும் எட்டாம் பாவம்
x
தினத்தந்தி 3 Aug 2018 12:04 PM GMT (Updated: 3 Aug 2018 12:04 PM GMT)

ஜோதிடத்தில் கூறப்படும் மறைவு ஸ்தானங்களில் மிக கடுமையான ஸ்தானமாக கருதப்படுவது எட்டாம் பாவம் ஆகும். இந்த மண்ணில் தோன்றிய அனைத்து ஜீவ ராசிகளுக்கும் ஒரு நாள் அழிவு உண்டு என்பதை நினைவூட்டும் இடம் இது.

உலகின் முதன்நிலை கோடீஸ்வரன் என்றாலும், பிச்சை எடுக்கும் ஆண்டியாக இருந்தாலும் மரணம் என்பது பொது விதியாக இருக்கிறது. மரணத்தில் இருந்து யாரும் தப்பி ஓடி ஒளிய முடியாது.

எட்டாம் பாவம் என்பது ஜாதகரின் ஆயுள் பற்றி கூறுகிறது. ஆயுள் காரகன் சனி, ஜாதகரின் லக்னத்திற்கு பாதகம் செய்யும் பாப கிரகங்களின் நிலையை வைத்துதான் ஒருவரின் ஆயுள் பற்றி கூற முடியும். ஒருவரின் ஆயுள் முடிவு பல விதமாக இருக்கலாம் என்றாலும், நோயால் ஏற்படும் மரணம் பற்றிதான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம்.

எட்டாம் இடத்தைக் கொண்டு ஆயுள் மட்டும் கணிக்கப்படுவதில்லை. ஆயுள் முடியக் காரணம், மரணம் சம்பவிக்கும் விதம், ஆயுள் முடியும் கால நேரம், அரசால் ஏற்படும் உயிர் சேதம் (தூக்கு, என்கவுண்டர், ராணுவத்தில் வீர மரணம்), கொலை செய்தல், கொலை செய்யப்படுதல், கொடூர விபத்து, உடல் உறுப்பு மாற்று சிகிச்சை உள்ளிட்டவை குறித்தும் இந்த இடம் சொல்கிறது. மனிதனுக்கு மரணமும், பிறப்புக்குரிய அனைத்து வேலைபாடுகளும் இந்த எட்டாம் பாவத்தில்தான் காண முடிகிறது.

8-ம் இடத்திற்கான அதிபதி, எட்டில் இருப்பது அந்த ஜாதகருக்கு நீண்ட ஆயுளைத் தரக்கூடும். 8-ம் இடத்திற்கான அதிபதி 6-ல் மறைவதை விட, 12-ல் மறைவது, நல்ல ஆரோக்கியத்தையும், தீர்க்க ஆயுளையும் வழங்கும். எட்டாம் இட அதிபதி இரண்டாம் இடத்தில் இருந்தால், அவர் 7-ம் பார்வையாக எட்டாம் இடத்தைப் பார்ப்பார். அதன் மூலம் ஜாதகருக்கு தீர்க்க ஆயுள் கிடைக்கும். எட்டாம் இடத்தின் அதிபதி லக்னத்தில் இருந்தால் சில சங்கடங்கள் தோன்றும் என்றாலும், நல்ல ஆயுள் பலன் இருக்கும்.

மேஷ லக்னத்திற்கு செவ்வாய் லக்னாதிபதியாகவும், எட்டாம் இட அதிபதியாகவும் உள்ளார். எனவே செவ்வாய் நீச்சம் பெற்றால் உடல் ஆரோக்கியம் கெடும். மனக் கஷ்டம் இருக்கும். எந்நேரமும் நோய் இருந்து கொண்டே இருக்கும். துலாம் லக்னத்திற்கு, சுக்ரன் தான் லக்னாதிபதியாகவும், எட்டாம் இட அதிபதியாகவும் இருக்கிறார். இவர் உச்சம் பெறுவது ஆறாம் இடம் என்பதால் நோய் தாக்கம் அதிகரிக்கும்.

ரிஷபம் மற்றும் சிம்ம லக்னத்திற்கு குரு தான் எட்டாம் இடத்தின் அதிபதி. இந்த ஜாதகர்களைப் பொறுத்தவரை குரு நீச்சம் பெறாமல் இருப்பது நல்லது. உச்சம் பெறாமலும் இருக்க வேண்டும். குரு உச்சம் பெறாமல் எந்த இடத்தில் இருந்தாலும் நன்மையைச் செய்வார். அதுவே நீச்சம், உச்சம் பெற்றிருந்தால் சிறுவயது முதல் நோய்கள் வந்து கொண்டே இருக்கும்.

மிதுன லக்னத்திற்கும், கடக லக்னத்திற்கும் சனியே எட்டாம் இடத்தின் அதிபதி. இவர் நீச்சம் பெறாமல் இருக்க வேண்டும். அப்படி நீச்சம் பெற்றால் அந்த ஜாதகரின் மனம் ஒரு நிலையில் இருக்காது. தவிர மூட்டு வலி, வயிற்றுக் கோளாறு, மூல நோய் வரக்கூடும். முதுமை காலத்தில் தொற்று நோய் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம், கும்பம் லக்னத்திற்கு புதன் எட்டாம் இடத்தின் அதிபதி. எனவே புதன் ஆட்சி, உச்சம் பெற்றால் ஜாதகருக்கு யோகம். அதுவே நீச்சம் பெற்றால், ஜாதகரின் ஆயுள் பலம் குறையும். குடல் புண், ரத்த அழுத்தம் வரும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

கன்னி லக்னத்திற்கு செவ்வாய் எட்டாம் இட அதிபதியாக இருக்கிறார். இவர் மகரத்தில் உச்சம் பெறுவது நல்ல யோக பலன் தரும். நீண்ட ஆயுள் இருக்கும். மாறாக நீச்சம் பெற்றால் ஜாதகருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், எலும்பு தேய்மானம், மூட்டு வலிகள் தொல்லை தரும். தனுசு லக்னத்திற்கு எட்டாம் பாவாதிபதி சந்திரன். அவர் 6-ம் பாவத்தில் உச்சம் பெறுவது யோகம். என்றாலும் ஜாதகர் மனநோயாளி போல் சில சமயம் நடந்து கொள்வார். சந்திரன் நீச்சம் பெற்றால் ஜாதகருக்கு முடக்குவாதம் வரும்.

மகர லக்னத்திற்கு சூரியனே எட்டாம் இடத்தின் அதிபதி. சூரியன் 4-ம் இடமான மேஷ ராசியில் உச்சம் பெறலாம். ஆனால் 10-ம் இடமான துலாம் ராசியில் நீச்சம் பெற்று விடக்கூடாது. அவ்வாறு நீச்சம் பெற்றால் ஜாதகருக்கு தலைவலி, ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போவது, உடல் சோர்வு, நரம்பு தளர்வு, சரியான உறக்கம் இல்லாமை போன்றவற்றால் தவிப்பார்கள்.

மீன லக்னத்திற்கு 8-ம் இடத்தின் அதிபதி சுக்ரன். இவர் 7-ம் இடமான கன்னியில் நீச்சம் பெறுவது நன்மையை வழங்கும். மாறாக உச்சம் பெற்றால் அந்த ஜாதகருக்கு சர்க்கரை நோய், உடல் பருமன், தசைப்பிடிப்பு, தொற்று நோய்கள் வரக்கூடும். சிறுவயதில் முதல் நெஞ்சில் சளித் தொல்லை இருக்கும்.

எட்டாம் இடத்தில் நிற்கும் கிரகங்களால் ஏற்படும் நோய்களைப் பற்றிப் பார்க்கலாம்.

* எட்டில் சூரியன் நின்றால், தேகத்தில் ஏதாவது பிணி இருந்துகொண்டே இருக்கும். கண்களில் கோளாறு, நெஞ்சு அடைப்பு, வாயுதொல்லை, பின் தலையில் காயம் ஏற்படலாம். சூரியன் ஆட்சி, உச்சம் பெற்றால் தீர்க்க ஆயுள் பெறுவார். இல்லையேல் மத்திம ஆயுள் கொண்டவராக இருப்பார்.

* சந்திரன் 8-ம் இடத்தில் நின்றால், தாய் வழி பரம்பரை நோய்கள் வரும். கெட்ட நீரால் பல நோய்கள் வரும். நெஞ்சில் கபம் கட்டும். தீராத வயிற்றுவலி அவ்வப்போது ஏற்படும். சந்திரன் ஆட்சி, உச்சம் பெற்றால் தீர்க்க ஆயுள் உண்டு. இல்லையேல் அற்ப ஆயுள் கொண்டவராக இருப்பார்.

* எட்டில் செவ்வாய் நின்றால் உடல் வலிகள் வந்து போகும். ரத்தசோகை, உடலில் ரத்த அளவு குறைதல், கணையம் பாதிப்பு ஏற்படலாம். செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்றால் தீர்க்க ஆயுள் உண்டு. இந்த ஜாதகர் போதைக்கு அடிமையாகாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

* எட்டில் புதன் நிற்பதை, ‘மறைந்த புதன் நிறைந்த பலன்’ என்பார்கள். இந்த ஜாதகருக்கு தீர்க்க ஆயுள் உண்டு. இருந்தாலும் சுவாச கோளாறு, வாயுத்தொல்லை, கை கால் முடக்கவாதம், உடல் அங்க குறைவு இருக்கும்.

* குரு பகவான் 8-ம் இடத்தில் நின்றால், சிறு வயது முதல் ஏதாவது நோய் இருந்து கொண்டே இருக்கும். வயிற்று கோளாறு, மண்ணீரல், கணையம், பிரச்சினைகள் இருக்கும். குரு ஆட்சி, உச்ச நிலையில் இருந்தால் தீர்க்க ஆயுள் இருக்கும். குரு வேறு நிலைகளில் இருந்தால் அற்ப ஆயுள் தான்.

* எட்டாம் பாவத்தில் சுக்ரன் நின்றால் நெஞ்சில் கபம் சேரும். சுவாசக் கோளாறு, பால்வினை நோய், தோலில் அரிப்பு, கட்டிகள் வரக்கூடும். சிலருக்கு காச நோய்கள் தாக்கும். இந்த வகை ஜாதகருக்கு சுக்ரன் எந்த நிலையில் இருந்தாலும் தீர்க்க ஆயுள் பலன் உண்டு.

* எட்டாம் பாவத்தில் சனி நிற்பதோடு, அவர் நீச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகருக்கு பரிபூரண ஆயுள் பலன் உண்டு. என்றாலும் கண் பார்வை மங்கும். சரீரத்தில் ஏதாவது தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும். புதிய தொற்று நோய்கள் வரக்கூடும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும்.

* எட்டாம் பாவத்தில் ராகு நின்று, அதனை சுப கிரகம் பார்த்தால் மட்டுமே ஜாதகருக்கு தீர்க்க ஆயுள் உண்டு. இல்லையேல் மத்திம ஆயுள் மட்டுமே. உடலில் பலவிதமான நோய்களைக் கொண்டவராக இவர் திகழ்வார். தனது உடல் மீது அக்கறை இல்லாதவராகவும் இருப்பார். விஷப்பூச்சி கடிப்பதால் உடல் பொலிவு குறையும்.

* எட்டில் கேது நின்று, அதன்மீது சுப கிரக பார்வை இருந்தால் ஜாதகர் நீண்ட ஆயுள் கொண்டவராக இருப்பார். இல்லையேல் மத்திம ஆயுள் கொண்டவர். சிறு வயதில் தொற்றிய நோய்கள் அவ்வப்போது வந்துபோகும். பருவகால மாற்றங்களில் வரக்கூடிய நோய்கள் தாக்கும். நோய்களை அகலச் செய்வதில் அக்கறைக் காட்ட மாட்டார்.

- ஆர்.சூரியநாராயணமூர்த்தி

மனித ஆயுளின் வகை

மனித ஆயுளை ஆறு வகையாக பிரிக்கிறார்கள். அவை:-

சிசுவுக்கு மரணம் - தாயின் வயிற்றில்

பாலாரிஷ்டம் - 6 வயது வரை

அற்ப ஆயுள் - 6 வயது முதல் 40 வரை

மத்திம ஆயுள் - 40 வயதுக்கு மேல்

தீர்க்க ஆயுள் - 60 வயதுக்கு மேல்

பரிபூரண ஆயுள் - 90 வயதுக்கு மேல் 

Next Story