ஆன்மாக்களை அறிய உதவும் பன்னிரண்டாம் பாவம்


ஆன்மாக்களை அறிய உதவும் பன்னிரண்டாம் பாவம்
x
தினத்தந்தி 9 Aug 2018 10:00 PM GMT (Updated: 9 Aug 2018 6:27 AM GMT)

மனிதர்களின் கண்ணில் புலப்படாத வேதாங்க ரகசியங்களை உள்ளடக்கி வைத்து இருப்பது தான், ஜோதிட ரகசிய சூட்சும தத்துவம்.

ஜோதிடத்தில் லக்னத்தில் இருந்து தொடங்கி 12 பாவ கட்டங்கள் கூறப்படுகிறது. சந்திரன் நின்ற பாவத்தை, ராசி கட்டமாக பார்க்கிறோம். லக்னத்தில் இருந்து 12-வது ராசி கட்டத்தை மறைவு ஸ்தானமாக வைத்து உள்ளனர்.

இந்த வாரம் பன்னிரண்டாம் பாவத்தின் ஆதிபத்தியங்கள் என்ன என்பதை பார்க்கும் போது, மனித பிறவிக்கு, மனித அறிவுக்கு மீறிய ஏதோ ஒன்று மனிதனுக்காக வேலை செய்து கொண்டு இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

கடந்த எட்டாம் பாவத்தில் மனிதனின் மரணத்தைப் பற்றிப் பார்த்தோம். அந்த மரணத்திற்கு பிறகு அந்த ஆன்மா பற்றி இந்த பன்னிரண்டாம் பாவத்தில் தான் பார்க்க முடிகிறது. நமது உடலை விட்டு பிரிந்த ஆத்மா மீண்டும் நமது உடலுக்குள் செல்ல கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை போராடி பார்க்கும். மீண்டும் இந்த உடலுக்குள் சென்று தங்க முடியாது என்பதை உணர்ந்த பின்புதான் அந்த ஆன்மா, உடலை விட்டு வெளியே நிற்கும்.

கிட்டத்தட்ட மூன்று நாட்கள் ஆத்மா, அந்த உடலை பார்த்துக் கொண்டே இருக்கும் அல்லது உடலை எரித்த சாம்பலை கரைக்கும் வரை அதனை உற்று நோக்கும். இது ஒரு வகை வேதாந்த ரகசியம். அந்த மூன்று நாட்களில் ஆத்மா, தான் விரும்பிய அறை, கட்டில், உபயோகித்த பொருட்கள் என்று வீட்டையே சுற்றி வரும் என்பது பிரபஞ்ச ரகசியமாகும். சில ஆன்மாக்கள் மவுனமாக இருந்து விட்டு செல்லும். சில ஆன்மாக்கள் ஆர்ப்பாட்டம் செய்யும். சில ஆன்மாக்கள் அழுது புரண்டு கொண்டு இருக்கும். இவையாவும் பன்னிரண்டாம் இடத்தின் மூலமாக ஜோதிடத்தில் அறிய முடியும்.

12-ம் பாவாதிபதி தரும் நோய்கள்

ஒருவரது ஜாதகத்தில் 12-ம் இடம் சுத்தமாக இருந்தால், அந்த ஜாதகரும் ஆரோக்கியமாக இருப்பார். 12-ம் இடத்தில் எந்த கிரகத்தின் ஆட்சி, உச்சம், நீச்சம் இருக்கக்கூடாது. அவ்வாறு இருப்பின், ஜாதகர் அந்த கிரகத்திற்குரிய நோய்கள் தாக்கி அவதிப்படுவார். அதே போல் பன்னிரண்டாம் இடத்திற்கு அதிபதியும் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருக்கக் கூடாது. அந்த ஜாதகர் பரம்பரை நோயால் துன்பப்படுவார்.

பன்னிரண்டாம் இடத்திற்கு அதிபதியின் திசை நடப்பதும் கூடாது. இந்த ஜாதகர் வெளிநாடு செல்வார். அங்குள்ள நோய்களின் தாக்குதலுக்கு ஆளாவார். 12-ம் பாவத்தில் நின்ற கிரகத்தின் திசை நடந்தால், அந்த கிரகங்களுக்குரிய நோய்கள் தாக்கும். 12-ம் இடத்திற்குரிய அதிபதியே, பாதகாதிபதியாக இருந்தால், அந்த ஜாதகர் மரணம் அல்லது அதற்கு ஒப்பான கண்டத்தை அடைவார்.

12-ம் இடத்திற்கான அதிபதியுடன் சேர்ந்த கிரகங்களின் திசையும் நடக்கக்கூடாது. அப்படி இருந்தால் அது சுப கிரகமானாலும் சரி ஜாதகரை படாதபாடு படுத்தி எடுக்கும். எந்த நோய் எந்த மருந்தை எடுப்பது என்று தெரியாமல் குழம்புவார்கள்.

பன்னிரண்டாம் இடத்திற்கு அதிபதியுடன் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது சேர்ந்து இருந்தாலோ அல்லது இவர்களில் ஏதாவது ஒரு கிரகம் பன்னிரண்டாம் இடத்திற்கு அதிபதியாக இருந்தாலோ அல்லது இந்த கிரகங்களின் நட்சத்திர பாதத்தில் நின்றாலோ, அந்த ஜாதகர் சொந்த ஊரை விட்டு வேறு இடங்களில் இருப்பார். இவர் செய்யும் வேலைகளின் மூலம் நோய்கள் தாக்கும். நோய் எதிர்ப்பு சக்திகள் குறைவு என்பதால் தொற்று நோய்கள் உடனே வரக்கூடும்.

12-ம் பாவாதிபதி, பன்னிரண்டாம் இடத்தில் நின்றால், அந்த ஜாதகருக்கு வெளிநாட்டு யோகம் அமையும். வெளிநாடுகளில் தங்கி தொழில் செய்யும் நிலை உருவாகும். இருப்பினும் மூட்டு வலி, முதுகு தண்டுவட வலி, மூல நோய் வரக்கூடும். இரவில் உறக்கம் கெடுவதால் உண்டாகும் நோய்களும் ஏற்படும்.

12-ம் இடத்தின் அதிபதியை சுப கிரகங்கள் பார்த்தால் வெளிநாடு யோகம், வெளிநாடு தொழில் அமைக்கும் யோகம், வெளிநாட்டு பணம் சேர்ப்பது, வெளிநாடுகளுக்கு சென்று கொண்டே இருப்பது, முழுமையான தாம்பத்ய சுகம், நிம்மதியான தூக்கம், தூக்கத்தில் தெய்வங்கள், மூதாதையர்கள் வந்து பேசுவது என்று நடக்கும். இதுவே அசுப கிரக பார்வை இருந்தால் சிறைவாசம், குஷ்ட நோய், கண்ணில் புலப்படாத கிருமிகள் தாக்குவதால் வரும் நோய்கள் ஏற்படும்.

12-ம் பாவத்தில் நிற்கும் கிரகங்கள்

 12-ம் பாவத்தில் சூரியன் நின்றால், ஜாதகர் வெளிநாடு சென்று வர வாய்ப்பு கிடைக்கும். மேலும் உடல் நிலையில் ஏதாவது பிணி இருந்து கொண்டே இருக்கும்.

 பன்னிரண்டாம் பாவத்தில் சந்திரன் நின்றால், ஜாதகருக்கு ஜலதோஷம், வலிப்பு நோய் முடக்குவாதம், கணயம், நெஞ்சு எரிச்சல் வாயு தொல்லை இருக்கும். உடலை பற்றி எப்போதும் கவலை இருந்து கொண்டே இருக்கும்.

 12-ம் பாவத்தில் செவ்வாய் நின்றால், ஜாதகர் மனதில் நிம்மதியற்ற நிலையிலேயே இருப்பார். உடல்சூடு, வேனில் கட்டிகள், சிலந்தி கட்டிகள், மூலநோய் வரும். கால்களில் காயம், வெட்டுபடுதல், தோல் அரிப்பு தோன்றும்.

 பன்னிரண்டாம் பாவத்தில் புதன் நின்றால், அந்த ஜாதகரின் புத்தி கெட்ட வழியில் சென்று பணத்தை செலவு செய்வார். தனக்கு வரக்கூடிய நோய்களுக்கு தானேகாரணமாக இருப்பார். ரத்தம் விஷத்தன்மை அடைவது, கால்களில் ரத்த ஓட்டம் சரியில்லாமல் போவது போன்ற நோய்கள் வரும்.

 12-ம் பாவத்தில் குரு இருந்தால், ஜாதகர் உடல் பருமன் கூட ஒரு வகை நோயாக இருக்கும். வெளிநாடு செல்வார். பணம் பொருள் சேர்க்கை உண்டு. ஆனால் எந்த நேரமும் ஏதாவது வலி இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு திருமணம் தாம்பத்ய உறவுகளில் நாட்டமே இல்லாமல் போய்விடும்.

 பன்னிரண்டாம் பாவத்தில் சுக்ரன் இருந்தால், ஜாதகர் நல்ல உடல் ஆரோக்கியம் பெற்று இருப்பார். தீராத பாலுணர்வு கொண்டவராகவும் இருப்பார். உடலை கெடுக்கும் போதை வஸ்துகளுக்கு அடிமையானவர். இவரது மனமே பாதி நோய்களுக்கு வழிவகுக்கும்.

 12-ம் இடத்தில் சனி நின்றால், ஜாதகருக்கு மிகவும் கஷ்டமான வாழ்க்கை உண்டாகும். உடலில் பித்தம், மூலம் நோய், பாதங்களில் விரல் பாதிப்பு என்று எந்த நேரமும், ஏதாவது நோய் உடலை வதக்கிக்கொண்டு இருக்கும். வெளிநாடு முயற்சிகள் கடுமையான போராட்டத்திற்கு பிறகு அமையும்.

 பன்னிரண்டாம் இடத்தில் ராகு நின்றால், ஜாதகருக்கு சிறிது யோகம் என்றாலும், எதுவும் எளிதில் நடந்து விடாது. வெளிநாடு செல்லவும், வெளிநாட்டில் தங்கி வேலைபார்க்கும் சூழலும் உருவாகும். உடலில் ரத்தம் குறைவு, உடல் தளர்வு இருக்கும். ஜலதோஷம், சுவாச கோளாறு, கண்பார்வை குறைவு, பாத வெடிப்பு, பாத புண்கள், பருவ கால நோய்கள் வரக்கூடும்.

 12-ம் பாவத்தில் கேது நின்றால், அந்த ஜாதகர் இந்த உலகில் உள்ள அனைத்து சுக துக்கங்களையும் அனுபவிப்பவராக இருப்பார். இளமை காலத்திற்கு மேல் பெரும் பணம் சம்பாதிக்க பாக்கியம் கிட்டும் என்றாலும், உடலில் நோய்களை போக்க போதிய அக்கறை காட்டமாட்டார். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும்.

Next Story