கைரேகை அற்புதங்கள் : நீண்ட ஆயுள் யாருக்கு?‘


கைரேகை அற்புதங்கள் : நீண்ட  ஆயுள்  யாருக்கு?‘
x
தினத்தந்தி 26 Oct 2018 1:30 AM GMT (Updated: 25 Oct 2018 9:36 AM GMT)

நெருநல் உளனொருவன் இன்றிலன் என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு’ என்று ஆயுளைப்பற்றி வள்ளுவர் சிறப்பாக கூறியிருக்கிறார். உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும், உயிருக்கு மிஞ்சியது ஒன்றும் இல்லை.

 உடலில் இருந்து உயிர் பிரியும் நாளில், பிறப்பின் தொடர்ச்சிக்கு முற்றுப்புள்ளி பிறந்துவிடுகிறது. எதிர்கால கனவின் அடிப்படையில் எத்தனை எத்தனையோ திட்டங்கள் போடப்படுகின்றன.

இன்று மடி மீது தவழும் மழலைச் செல்வத்தை வளர்த்து மனிதனாக்கி, எல்லா வளங்களோடும் வாழச் செய்து, அந்த அருமையான வாழ்வைக் கண்ணாரப் பார்த்து களிக்கின்ற ஆர்வம் எல்லாப் பெற்றோருக்கும் ஏற்படுவது உண்டு. இன்னும் சொல்லப்போனால், பன்னெடுங்காலம் வாழ்ந்து பலப்பல சுகங்களையும் அனுபவிக்கப் போகிறோம் என்று பெருங்கோட்டைகள் கட்டிக் கொண்டிருப்பது மனித இயல்பு.

சத்தியாச்சாரியார் என்பவர், ஓர் உன்னதமான ஜோதிட மேதை. அவர் கூறியுள்ள சில விதிமுறைகளை வாசகர்களுக்கு தெரிவிக்கின்றேன். சத்ரு வீட்டில் இருக்கும் கிரகம், நீச்ச வீட்டில் இருக்கும் கிரகம், சூரியனுடன் சேர்க்கை பெற்ற கிரகம்.. இவர்களால் ஆயுள் குறையும். வக்ரம் பெற்ற கிரகம், வர்கோத்தமம் அடைந்த கிரகம், உச்சம் பெற்ற கிரகம் போன்றவை ஆயுளைக் கூட்டும். லக்னேசனுக்கு விரோதியான கிரகம், லக்னேசனது திசையில் தனது ஆட்சி காலத்தில் ஜாதகருக்கு மரணத்தைக் கொடுப்பார்.

ஒரு குழந்தைக்கு 4 வயது வரை தாய் தோஷம், 8 வயது வரை தந்தை தோஷம், 12 வயது வரை பால தோஷம் (பாலாரிஷ்டம்). ஆகவே இந்த 12 வயது வரையிலும், ஜாதகருடைய ஆயுளை யாருமே நிர்ணயம் செய்ய முடியாது.

ஒருவர் ஜாதகத்தில் லக்னத்துக்கு 3, 6, 11 ஆகிய இடங்களில் 8-ம் வீட்டோன் (ஆயுள்காரகன்) இருந்தால் அந்த ஜாதகரின் ஆயுள் கூடும். 8-ம் வீட்டோன் இருக்கின்ற ராசி, அம்சம், நட்சத்திரம் ஆகியவற்றின் அதிபதிக்குள்ள பலத்தைக் கொண்டு ஆயுளை நிர்ணயிக்க வேண்டும். 8-க்குரியவன் (அஷ்டமாதிபதி) ஆயுள் ஸ்தானாதிபதி, 12-ம் வீட்டில் மறைய ஆயுள் குறையும்.

லக்னேசன் பலமாக அமைந்து, 5-ம் வீடு, 9-ம் வீடு (திரிகோண ஸ்தானங்கள்) வலுப்பெற்றிருந்தால், ஆயுளைக் குறைக்கப் பார்க்கும் மற்ற கிரகங்களின் ஆதிக்கத்தை அவர்கள் அடக்கி விடுவார்கள். ஆதலால் ஒருவர் ஜாதகத்தில் திரிகோண ஸ்தானங்கள் (1, 5, 9) பலமுடன் அமைந்தவர் பாக்கியசாலி. லக்னேசன், பூர்வ புண்ணிய ஸ்தானம் என்னும் 5-ம் வீட்டோன், பாக்கியாதிபதி என்னும் 9-ம் வீட்டோன் ஆகிய மூவரும் பலம் பெற அந்த ஜாதகர் தீர்க்காயுள் உள்ளவராக திகழ்வார்.

இனி கைரேகை சாஸ்திரப்படி ஆயுள் நிர்ணயம் ஒருவருக்கு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம். ஆயுள் ரேகையை ஆங்கிலத்தில் ‘லைப் லைன்’ (LIFE LINE) என்று அழைப்பார்கள். கையில் ஆயுள் ரேகை குரு மேட்டின் அடியில் உற்பத்தியாகி, சுக்ர மேட்டை வளைத்து, கீழ்நோக்கி கையில் அடிப்பாகம் நோக்கிச் செல்லும். ஆயுள் ரேகை, பெருவிரலை விட்டு தள்ளி அமைய வேண்டும். பெருவிரலின் மிக அருகில் ஆயுள் ரேகை வளைந்து செல்லக்கூடாது. அப்படிப்பட்டவருக்கு ஆயுள் தீர்க்கம் இல்லை.

ஆயுள் ரேகை சிறியதாக அமைந்து முடிவில் கிராஸ் குறி தென்பட்டால், அது அகால மரணத்தை தெரிவிக்கும் அறிகுறி. ஆயுள், புத்தி, இருதய ரேகை ஆகிய மூன்று ரேகைகளும் கூடி குரு மேட்டில் நின்றால் அந்த ஜாதகர் கொலை செய்யப்படுவார் என்பதைச் சொல்லும் அமைப்பாகும். ஆயுள் ரேகை உற்பத்தியாகும் இடத்தில், கிராஸ் குறி தென்பட்டால் விபத்து ஏற்பட்டு கை, கால்களை இழக்க நேரிடும். ஆயுள் ரேகை, இருதய ரேகை, புத்தி ரேகை ஆகிய மூன்று ரேகைகளும் குரு மேட்டில் கூடி நின்று, அந்த இடத்தில் இரண்டு நட்சத்திர குறி தென்பட்டால், அந்த நபர் தூக்கில் இடப்படுவார். மேற்குறிப்பிட்ட மூன்று ரேகைகளும் அமைந்து, அதன் கீழ் ஒரு நட்சத்திரக்குறி தென்பட்டால், அந்த ஜாதகருக்கு புற்றுநோய் தாக்கும் வாய்ப்புண்டு.

ஆயுள் ரேகை சுக்ர மேட்டை வளைத்து, கீழ் உள்ள கங்கண ரேகை வரை சென்றிருந்தால், அந்த ஜாதகருக்கு பூரண ஆயுள் உண்டு. ஆயுள் ரேகை எவ்வித பழுதும் இன்றி, கங்கண ரேகையை தொட்டால் அந்த நபருக்கு 100 ஆயுசு என்பதை தெரிவிக்கும் அறிகுறியாகும்.

Next Story