மயிலம் முருகன் கோவில் கும்பாபிஷேகம்- லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


மயிலம் முருகன் கோவில் கும்பாபிஷேகம்- லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
x

கும்பாபிஷேக யாகசாலை பூஜையை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் ஸ்ரீசிவஞான பாலய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதும், பழமைவாய்ந்ததுமான முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், மயில் வடிவ மலையில் பக்தர்களுக்கு அருட்காட்சியளித்து வருகிறார்.

இக்கோவிலில் கடந்த 2012-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து 12 ஆண்டுகளுக்குப்பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த திருப்பணிகள் முடிவடைந்து கோவில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

இதனை தொடர்ந்து கோவிலின் மகா கும்பாபிஷேக விழா கடந்த 18-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதனை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் ஸ்ரீசிவஞான பாலய சுவாமிகள் தொடங்கி வைத்தார். பின்னர் முளைப்பாரி இட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், அன்று மாலை 4 மணிக்கு கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசமும், மாலை 6.45 மணியளவில் முதல்கால வேள்வி வழிபாடு, விசேஷ திரவியங்கள், பூர்ணாகுதி, பேரொளி வழிபாடும் நடந்தது.

அதனை தொடர்ந்து 19-ந் தேதி காலை 2-ம் கால யாக வேள்விகள், பூர்ணாகுதி, பேரொளி வழிபாடும், மாலையில் 3-ம் கால யாக வேள்விகள், பூர்ணாகுதி, பேரொளி வழிபாடும், நேற்று முன்தினம் காலை 20-ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகளுக்கு சிறப்பு குரு திருவடி வழிபாடும், அது முடிந்து காலை 9.30 மணியளவில் 4-ம் கால யாக வேள்விகள், 108 புனித பொருட்களுக்கு பேரொளி வழிபாடும், மாலையில் 5-ம் கால யாக வேள்விகள், 108 புனிதப்பொருட்கள் வேள்வி, பூர்ணாகுதி, சிறப்பு மங்கள வாத்தியம் வழிபாடு, பேரொளி வழிபாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை 6 மணிக்கு மங்கள இசை, 6-ம் கால யாக வேள்விகள், நாடி சந்தானம், திரவியாகுதியும், 9 மணிக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ராதானமும் நடந்தது.

பின்னர் 9.15 மணியளவில் வேள்வி சாலையில் இருந்து புனித கலசங்கள் புறப்பாடாகி கோவிலின் விமான கோபுர கலசங்களுக்கும் மற்றும் விநாயகர், பாலசித்தர், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், உற்சவ மூர்த்திகளுக்கும் மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் ஸ்ரீசிவஞான பாலய சுவாமிகள், புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.

இவ்விழாவில் மயிலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும், விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் மற்றும் புதுச்சேரியில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனுக்கு அரோகரா... கந்தனுக்கு அரோகரா... என்ற பக்தி கோஷங்கள் முழங்க பயபக்தியுடன் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாலை 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேக வழிபாடும், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.


Next Story