சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 26 Oct 2021 11:06 AM IST (Updated: 26 Oct 2021 11:19 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 59 லட்சத்து 54 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 270 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சாா்ஜாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது 2 பயணிகளை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அவர்களது உடைமைகளில் ஏதுவும் இல்லாததால் இருவரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனா். அதில் 2 பேரும் உள்ளாடைக்குள் 7 பாா்சல்களை மறைத்து வைத்து இருந்தனர். அதனை பிரித்து பார்த்தபோது தங்க கட்டிகள் இருந்தன. அவர்கள் 2 பேரிடம் இருந்தும் ரூ.71 லட்சத்து 72 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 470 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 2 பேரையும் கைது செய்தனர்.

அதேபோல் பன்னாட்டு முனையத்தில் வருகை பகுதி கழிவறை குப்பை தொட்டியில் மா்ம பாா்சல் கேட்பாரற்று கிடந்தது. சுங்க இலாகா அதிகாரிகள், மோப்ப நாயுடன் வந்து மா்ம பாா்சலை ஆய்வு செய்தனா். அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று உறுதியானது.

பின்னர் அந்த பாா்சலை பிரித்து பாா்த்தனா். அதில் சில்வா் பேப்பா் பாா்சலில் ரூ.87 லட்சத்து 82 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 800 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். அதனை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர். துபாயில் இருந்து வந்த விமானத்தில் அதை கடத்தி வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஒரே நாளில் ரூ.1 கோடியே 59 லட்சத்து 54 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 270 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story