காஷ்மீரும் இந்தியாவின் ஒரு அங்கம் தான்


காஷ்மீரும் இந்தியாவின் ஒரு அங்கம் தான்
x
தினத்தந்தி 6 Aug 2019 3:30 AM IST (Updated: 6 Aug 2019 3:10 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே ராணுவமும், துணை ராணுவ படைகளும் குவிக்கப்பட்டன. அமர்நாத் யாத்ரிகர்களும், சுற்றுலா பயணிகளும், விடுதிகளில் தங்கி இருந்த மாணவர்களும் காலி செய்து தங்கள் ஊர்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

ஏதோ நடக்கப் போகிறது? என்று நாடே எதிர்பார்த்தது நடந்து விட்டது. நேற்று மாநிலங்கள வையில் உள்துறை மந்திரி அமித்ஷா காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு சலுகை வழங்கிய அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப் படுகிறது என்று அறிவித்துவிட்டார். இதற்கான அறிவிக்கையும் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டு இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில் சர்தார் வல்லபாய் படேல் நாட்டில் உள்ள எல்லா சமஸ்தானங்களையும் கலைத்து இந்தியாவின் ஓர் அங்கமாக விளங்க வேண்டும் என்பதற்காக பெரும் முயற்சி எடுத்து நிறைவேற்றவும் செய்தார்.

இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் காஷ்மீர் மாநிலத்தை இந்து மன்னரான ஹரிசிங் ஆண்டு வந்தார். அவர் காஷ்மீரை இந்தியாவோடு இணைக்கவேண்டும் என்றால் அதற்கு சில சிறப்பு சலுகைகள் வழங்கும் வகையில் சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அந்தவகையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-வது அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. இதன்படி, ராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு துறைகள் தவிர பிற துறைகள் தொடர்பாக மத்திய அரசாங்கம் நாடாளு மன்றத்தில் இயற்றும் சட்டங்கள் காஷ்மீர் மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் நிறைவேற்றினால் அந்த சட்டங்கள் காஷ்மீருக்கு பொருந்தாது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அசையா சொத்துக்களை அங்கு வாங்க முடியாது. ஆனால் இந்த மாநில மக்கள் இந்தியாவில் பிற மாநிலங் களில் அசையா சொத்துக்களை வாங்க முடியும். இதுமட்டுமல்லாமல் இந்த மாநிலத்தின் எல்லைகளை கூட்டவோ, குறைக்கவோ முடியாது. இப்படி இந்தியா முழுவதிலும் எல்லா மாநிலங்களுக்கும் உள்ள சட்ட திட்டங்கள் காஷ்மீருக்கு மட்டும் பொருந்தாமல், காஷ்மீர் ஒரு எட்டாக்கனியாக இருந்தது. காஷ்மீர் ஜனநாயக நாடான இந்தியாவில் ஒரு அங்கம். அந்தவகையில் எல்லா மாநிலங்களுக்கும் இடையேயான நிலைப்பாடு காஷ்மீரில் இருந்தால்தான் மத்திய அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்க முடியும்.

சுதந்திரம் அடைந்து நாடு 70 ஆண்டுகளை கடந்து 75-ம் ஆண்டை நோக்கி சென்று கொண்டிருக்கும் நேரத்தில் இன்னும் பயங்கரவாதம் அங்கு தலை விரித்தாடுவது நாட்டுக்கு நல்லதல்ல. மேலும் 65 ஆண்டு களாக சிறப்பு அந்தஸ்தை வழங்கியதால் காஷ்மீரில் அமைதி நிலவியதா? பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ளதா? என்று பார்த்தால் பூஜ்யம்தான். எனவே அரசியல் சட்டம் 370-வது பிரிவை ரத்து செய்ய மத்திய அரசாங்கம் எடுத்த முடிவு நிச்சயமாக வரவேற்கத்தக் கதாகும் என்று ஒரு கருத்தும், இதை செய்யவே கூடாது, இது ஒரு கருப்பு தினம் என்று கடுமையான எதிர்ப்பும் நிலவுகிறது. தற்போது இந்தியாவில் 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன. ஜம்மு-காஷ்மீர் தனியாக ஒரு மாநில அந்தஸ்தோடு இருப்பதற்கு பதிலாக ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படப் போகிறது. இனி மத்திய அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பில் காஷ்மீர் மாநிலம் இருப்பதால் பயங்கர வாதத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கமுடியும். மற்ற மாநிலங்களில் நிறைவேற்றப்படும் வளர்ச்சி திட்டங்களை அதிகளவில் நிறைவேற்ற முடியும். பயங்கரவாத மாநிலமாக திகழும் காஷ்மீரை அமைதி பொங்கும் எழில் மிகுந்த காஷ்மீராக மாற்றுவதற்கு இந்த நடவடிக்கை நிச்சயமாக உதவும். ஆனால் காஷ்மீர் மக்களின் ஆதரவில்தான் இதன் வெற்றி இருக்கிறது.

Next Story