சக்கர நாற்காலியில் சாதிக்கும் பெண்


சக்கர நாற்காலியில் சாதிக்கும் பெண்
x
தினத்தந்தி 8 Jun 2019 5:59 PM IST (Updated: 8 Jun 2019 5:59 PM IST)
t-max-icont-min-icon

சமூகப் போராளிகளின் கதைகளுக்குச் சற்றும் குறைவில்லாதது, இன்ஷா பஷீரின் கதை.

காஷ்மீரின் முதல் சக்கர நாற்காலி கூடைப்பந்து வீராங்கனையான இன்ஷா, தனது பிரியத்துக்குரிய கூடைப்பந்துக்காக போராடினார், போராடுகிறார், போராடுவார்.

15 வயது வரை எல்லா பெண் குழந்தைகளையும் போல ஓடியாடித் திரிந்துகொண்டுதான் இருந்தார், இன்ஷா.

ஒரு கறுப்பு நாளில், எல்லாமே மாறிவிட்டது. காஷ்மீர் பட்காம் மாவட்டத்தில் உள்ள இவரது வீடு அப்போதுதான் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. முழுமை பெறாத அவ்வீட்டின் மூன்றாவது தளத்தில் இருந்து தடுமாறி விழுந்தார், இன்ஷா.

அதில் படுகாயம் அடைந்த இன்ஷாவின் முதுகுத்தண்டு மோசமாகப் பாதிக்கப்பட்டது. அதிலிருந்து ஆறு மாத காலத்தில் இன்ஷா மீண்டுவிடுவார் என்று மருத்துவர்கள் கூறியபோதிலும், அப்படி நடக்கவில்லை. இன்ஷாவுக்கு சக்கர நாற்காலியே கதியாகிப் போனது.

ஆனாலும் குடும்பத்தினரின் ஆதரவால் பி.ஏ., பி.எட். படித்து முடித்தார். இருந்தபோதும், அவருக்கு என்று ஒரு கவுரவமான வேலை தேடிக் கொள்ள முடியவில்லை.

அன்றாடப் பணிகள் முதல், பொருளாதார ரீதியில் வரை எல்லாவற்றுக்கும் குடும்பத்தினரையே இன்ஷா சார்ந்திருக்க வேண்டிருந்தது. அதுதொடர்பாக உறவினர்கள் சுட்டிக் காட்டிக் கிண்டல் செய்தபோது, சோர்ந்துபோனார் அவர்.

‘‘ஒருமுறை எனது உறவினர் ஒருவர், நீ இந்நிலையில் இருப்பதற்கு, அந்த விபத்தில் செத்தே போயிருக்கலாம் என்றபோது நான் உடைந்துவிட்டேன். எனக்கு உலகத்தில் எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டதைப் போல உணர்ந்தேன்’’ என்கிறார்.

ஆனால் மகள் இன்ஷாவுக்காக அப்பா உறுதியான உறுதுணையாக இருந்தார். ஆனால் அவருக்கும் பார்க்கின்சன் வியாதி பாதிப்பு கண்டறியப்பட்டபோது, தனக்கு இருந்த ஒரே பிடிமானமும் போய்விட்டது போலத் தோன்றியது இன்ஷாவுக்கு.

சகோதரி உதவியுடன் ஒரு பிசியோதெரபி பயிற்சிக்கு சென்று வந்தபோதுதான், ஆண்கள் சக்கர நாற்காலி கூடைப்பந்து அணியைச் சேர்ந்த சிலரை இன்ஷா சந்தித்தார். அவர்களில் பலர், தன்னைவிட மோசமான நிலையில் இருந்தாலும், உற்சாகத்தோடு கூடைப்பந்து விளையாட முயல்வதை அறிந்தார்.

இன்ஷாவுக்குள் ‘பளிச்’சென ஒரு வெளிச்சம் பாய்ந்தது. சக்கர நாற்காலி கூடைப்பந்துதான் இனித் தனது வாழ்க்கை என முடிவு செய்தார். அடுத்த ஆறு மாத காலத்துக்கு, தீவிரப் பயிற்சி. அதன் விளைவாக, தடை பல கடந்து தானும் ஒரு சக்கர நாற்காலி கூடைப்பந்து வீராங்கனை என்ற தகுதியை எட்டினார்.

ஆனால் ஜம்மு-காஷ்மீரில் பெண்கள் சக்கர நாற்காலி கூடைப்பந்து அணி எதுவும் இல்லாததால், ஐதராபாத் சென்றார், இன்ஷா. அங்கு விளையாடி, தேசிய சாம்பியன்ஷிப்பில் ஆடவும் தகுதி பெற்றார். அது தனது வாழ்வின் தங்கத் தருணம் என்கிறார் இவர்.

அதன் பிறகு, இந்த விளையாட்டில் ஈடுபட வசதியாக தலைநகர் டெல்லிக்கே தனியாக இடம்பெயர்ந்து விட்டார்.

சுமார் ஓராண்டு காலமாக, டெல்லிக்கும் காஷ்மீருக்கும் இடையே பறந்துகொண்டிருக்கிறார் இன்ஷா. சக்கர நாற்காலி கூடைப்பந்து பயிற்சியுடன், உடல் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் பெண்களுக்கான வகுப்புகளையும் இன்ஷா நடத்துகிறார்.

கடந்த ஆண்டு மும்பையில் ஒரு தொடரில் இன்ஷா ஆடியபோது, அமெரிக்காவில் இருந்து வந்த சிலர், தங்கள் நாட்டுக்கு வந்து ஒரு விழிப்புணர்வு வகுப்பை நடத்தும்படி வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி, இம்மாதம் அமெரிக்கா பறக்கிறார் இன்ஷா. எல்லாவற்றுக்கும் மேலாக, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் ஒரு பெண்கள் சக்கர நாற்காலி கூடைப்பந்து அணியை உருவாக்க வேண்டும் என்பதே இவரது லட்சியமாக இருக்கிறது. ‘‘எங்கள் மாற்றுத்திறனாளி பெண்கள் பலரும், தங்கள் வாழ்க்கையை தாங்களே தீர்மானிக்க வேண்டும் என்று தவிக்கிறார்கள். அவர்களுக்கு நான் உதவ விரும்புகிறேன். மாற்றுத்திறனாளிகளுக்கும் எவ்வளவு வாய்ப்புகள் இருக்கின்றன என்ற விழிப்புணர்வைப் பரப்ப நான் விழைகிறேன்’’ என்று இன்ஷா குரலில் உறுதி தொனிக்கச் சொல்கிறார்.

‘‘எப்போதும் ஒரே நாளில் மாற்றம் நிகழ்ந்துவிடாது. அதற்கு பெரும் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, விடாமுயற்சி அவசியம். நான் வாழ்வில் எழ முயன்றபோது பலமுறை தடுமாறி விழுந்திருக்கிறேன். தனியே அழுதிருக்கிறேன். ஆனால் இன்று நானே பலருக்கு முன்மாதிரியாக உருவாகியிருக்கிறேன், பிறருக்கு போதிப்பவளாக ஆகியிருக்கிறேன் என்பதில் பெருமைப்படுகிறேன். என்னைப் போலவே ஒவ்வொரு மாற்றுத்திறனாளிப் பெண்ணும் தமது விதியை மாற்றி எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்’’ என்கிறார்.

இன்ஷா பஷீரின் நல்ல ஆசை நனவாக நாமும் வாழ்த்துவோம்.

Next Story