2007 உலகக்கோப்பை நாயகன் ஜோகிந்தர் சர்மா சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஜோகிந்தர் சர்மா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்
ஜோகிந்தர் சர்மா 2004 மற்றும் 2007 -க்கு இடையில் இந்தியாவுக்காக நான்கு ஒருநாள் போட்டிகள் மற்றும் பல டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் நெருக்கடியான தருணங்களில், ஜோகிந்தரை இறுதி ஓவரை வீச அப்போதைய கேப்டன் எம்எஸ் டோனி ஆச்சரியமான தேர்வாகத் தேர்ந்தெடுத்தார்.
பாகிஸ்தானுக்கு நான்கு பந்துகளில் ஒரு விக்கெட் மீதமுள்ள நிலையில், மிஸ்பா-உல்-ஹக்கை அவுட் செய்து இந்திய அணிக்கு முதல் டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்தார். இது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்றாகும்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஓய்வு குறித்து அவர் கூறியதாவது:- 2002-2017 வரையிலான எனது பயணம் எனது வாழ்க்கையின் மிக அற்புதமான ஆண்டுகள். ஏனெனில் இது விளையாட்டின் மிக உயர்ந்த மட்டத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெருமை. எனது அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், வழிகாட்டிகள் மற்றும் உதவி ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவருடனும் விளையாடியது ஒரு முழுமையான பாக்கியம், மேலும் எனது கனவை நனவாக்க உதவிய அனைவருக்கும் நன்றி. என்று அவர் கூறினார்.