2வது டி20 போட்டி; அயர்லாந்துக்கு 166 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த ஜிம்பாப்வே..!
ஜிம்பாப்வே தரப்பில் ரியான் பர்ல் 38 ரன்னும், கிளைவ் மடாண்டே 44 ரன்னும் எடுத்தனர்.
ஹராரே,
அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 7ம் தேதி நடைபெற்ற முதலாவது டி20 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வெஸ்லி மாதேவேரே மற்றும் ஆதிவனசே மருமணி ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் வெஸ்லி மாதேவேரே 9 ரன்னும், ஆதிவனசே மருமணி ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய டினாஷே கமுன்ஹுகம்வே 39 ரன்னும், வில்லியம்ஸ் 17 ரன்னும், பிரையன் பென்னட் ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் ஜிம்பாப்வே அணி 78 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து களம் இறங்கிய ரியான் பர்ல் - கிளைவ் மடாண்டே இணை நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டதோடு அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இறுதியில் ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் ரியான் பர்ல் 38 ரன்னும், கிளைவ் மடாண்டே 44 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி ஆட உள்ளது.