50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி- சென்னையில் இந்தியா-ஆஸ்திரேலியா ஆட்டம்?


50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி- சென்னையில் இந்தியா-ஆஸ்திரேலியா ஆட்டம்?
x

கோப்புப்படம் 

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் அக்டோபர் 15-ந் தேதி ஆமதாபாத்திலும், இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் ஆட்டம் சென்னையிலும் நடைபெறுகிறது.

புதுடெல்லி,

உலகக் கோப்பை கிரிக்கெட்

13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, போட்டியை நடத்தும் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளன.

எஞ்சிய 2 அணிகள் எவை என்பதை நிர்ணயிப்பதற்கான உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் வருகிற 18-ந் தேதி முதல் ஜூலை 9-ந் தேதி வரை நடக்கிறது. இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, நெதர்லாந்து, நேபாளம். ஓமன், ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியின் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.

உலகக் கோப்பை போட்டி தொடங்க இன்னும் 4 மாதமே இருக்கும் நிலையில் இதுவரை போட்டி அட்டவணை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கடந்த வாரம் லண்டனில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் போது அட்டவணை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஆமதாபாத்தில் தொடக்கம், இறுதிப்போட்டி

இந்த நிலையில் போட்டியை நடத்தும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள உலகக் கோப்பை போட்டிக்கான வரைவு அட்டவணை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) அனுப்பப்பட்டு இருக்கிறது. அத்துடன் இந்த வரைவு அட்டவணை போட்டியில் பங்கேற்கும் அனைத்து நாடுகளுக்கும் கருத்து கேட்பதற்காக அனுப்பப்பட்டுள்ளது. கலந்து கொள்ளும் நாடுகளின் கருத்தை அறிந்தபிறகு இறுதி அட்டவணை அடுத்த வாரத்தில் முறைப்படி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்க வரைவு அட்டவணையின்படி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அக்டோபர் 5-ந் தேதி தொடங்குகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, கடந்த உலகக் கோப்பையில் 2-வது இடம் பெற்ற நியூசிலாந்தை சந்திக்கிறது. தொடக்க போட்டி நடைபெறும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தான் இறுதிப்போட்டியும் (நவம்பர் 19-ந் தேதி) அரங்கேறுகிறது. நவம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் அரைஇறுதி போட்டி நடைபெறுகிறது. ஆனால் அரைஇறுதிப் போட்டிகள் நடைபெறும் இடம் குறித்து அட்டவணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்தியா-பாகிஸ்தான் மோதல்

கடைசியாக 2011-ம் ஆண்டு சொந்த மண்ணில் போட்டியை நடத்துகையில் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வலுவான ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அக்டோபர் 8-ந் தேதி நடக்கிறது. பரம எதிரியான பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதும் லீக் ஆட்டம் அக்டோபர் 15-ந் தேதி நடக்கிறது. மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டி ஆமதாபாத்தில் அரங்கேறுகிறது. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான ஆட்டம் தர்மசாலாவில் அக்டோபர் 29-ந் தேதியும், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆட்டம் ஆமதாபாத்தில் நவம்பர் 4-ந் தேதியும் நடக்கிறது.

பாகிஸ்தான் அணி தனது லீக் ஆட்டங்களை 5 நகரங்களில் விளையாடுகிறது. அந்த அணி தகுதி சுற்றின் மூலம் முன்னேறும் அணிகளுடன் ஐதராபாத்தில் அக்டோபர் 6, 12-ந் தேதிகளில் ஆடுகிறது. மேலும் பாகிஸ்தான் அணி 20-ந் தேதி ஆஸ்திரேலியாவையும் (பெங்களூரு), 23-ந் தேதி ஆப்கானிஸ்தானையும் (சென்னை), 27-ந் தேதி தென்ஆப்பிரிக்காவையும் (சென்னை), 31-ந் தேதி வங்காளதேசத்தையும் (கொல்கத்தா), நவம்பர் 5-ந் தேதி நியூசிலாந்தையும் (பெங்களூரு), நவம்பர் 12-ந் தேதி இங்கிலாந்தையும் (கொல்கத்தா) எதிர்கொள்கிறது.

இந்த உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளிபட்டியலில் 'டாப்-4' இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.


Next Story