உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி...! இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன ?


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி...! இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன ?
x

ஆஸ்திரேலிய அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுது.

இந்தூர்,

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்த ஆடுகளத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 109 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 76.3 ஓவர்களில் 197 ரன்னில் அடங்கியது. இந்திய தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அஸ்வின், உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டும் கைப்பற்றினர். அடுத்து 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா மீண்டும் சொதப்பியது. ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 60.3 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்து மொத்தம் 75 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

ஆஸ்திரேலிய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 64 ரன் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா 76 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. சிறிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா 3-வது நாளான இன்று களமிறங்கியது.

அதன்படி முதல் ஓவரிலேயே கவாஜாவை அஸ்வின் அவுட்டாக்கினார். ஆனால், அடுத்து வந்த லபுஷேனும், ஹெட்டும் அபாரமாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் 1 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியில் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடிக்கிறது.

இந்த வெற்றியால் ஆஸ்திரேலிய அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்தியா இறுதிக்கு முன்னேற வேண்டுமெனில் 4வது டெஸ்ட் போட்டி ,அகமதாபாத் டெஸ்ட்டில் வென்றே ஆக வேண்டும்.அந்த போட்டியில் ஒருவேளை இந்திய அணி தோல்வி அடைந்தால் , நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முடிவை பொறுத்து இந்தியாவின் வாய்ப்பு அமையும் .

அதாவது ,

நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்றிருக்கும் இலங்கை அணி நியூசிலாந்தை 2-0 என்று வெற்றி பெற்றால் கூட இந்தியா அகமதாபாத் டெஸ்ட்டில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விடும்.

இலங்கை அணி நியூசிலாந்தில் 2-0 என்று வெற்றி பெறவில்லை எனில் இந்தியா அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் வென்றாலும் வெல்லா விட்டாலும் தகுதி பெற்று விடும்.

இந்தியா - ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட் போட்டியும் இலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியும் மார்ச் 9ம் தேதிதான் தொடங்குகின்றன.


Next Story