மாயாஜாலம் காட்டிய பந்துவீச்சாளர்கள்..! சீட்டு கட்டு போல் சரிந்த விக்கெட்டுகள்..! ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி


மாயாஜாலம் காட்டிய பந்துவீச்சாளர்கள்..! சீட்டு கட்டு போல் சரிந்த  விக்கெட்டுகள்..! ராஜஸ்தானை வீழ்த்தி  பெங்களூரு அபார வெற்றி
x
தினத்தந்தி 14 May 2023 6:40 PM IST (Updated: 14 May 2023 6:44 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு சார்பில் பர்னெல் 3 விக்கெட்டும் , பிரேஸ்வெல் , கரண் சர்மா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

ஜெய்ப்பூர்,

16வது ஐபிஎல் சீசன் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இத்தொடரின் இன்று 2லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் ஜெய்ப்பூரில் மாலை நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதினார்.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, பாப் டு பிளிஸ்சிஸ் ஆகியோர் களம் இறங்கினர்.

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில் கோலி 18 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் களம் இறங்கினார். அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்திய இந்த ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். மேக்ஸ்வெல் ஒரு புறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டு பிளிஸ்சிஸ் 44 பந்தில் 55 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இதையடுத்து களம் இறங்கிய மஹிபால் லோம்ரோர் 1 ரன்னிலும், கார்த்திக் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். இதையடுத்து பிரேஸ்வெல் களம் இறங்கினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸ்வெல் 30 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 54 ரன் எடுத்த போது சந்தீப் சர்மாவின் பந்துவீச்சில் போல்டானார். அடுத்து களம் இறங்கிய அனுஜ் ராவத் சந்தித்த 2வது பந்திலேயே பவுண்டரி விரட்டினார். இறுதி ஒவரில் அனுஜ் ராவத் 2 சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இறுதியில் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடியது.

தொடக்கம் முதல் ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் ஜெய்ஸ்வால் , பட்லர் ரன் எதுவும் எடுக்காமலும் , சாம்சன் 4ரன்களும் , ரூட் 10ரன்களும் எடுத்து வெளியேறினர்.

பின்னர் வந்த வீரர்களும் பெங்களுரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஹெட்மைர் மட்டும் நிலைத்து ஆடி 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதனால் 10.3 ஓவர்களில் 59 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது. இதனால் பெங்களூரு அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரு சார்பில் பர்னெல் 3 விக்கெட்டும் , பிரேஸ்வெல் , கரண் சர்மா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.


Related Tags :
Next Story