கோவையில் 12-ந் தேதி தொடக்கம்: டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேலத்தில் 10 ஆட்டங்கள்-ரூ.1 கோடியே 70 லட்சம் பரிசு


கோவையில் 12-ந் தேதி தொடக்கம்: டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேலத்தில் 10 ஆட்டங்கள்-ரூ.1 கோடியே 70 லட்சம் பரிசு
x

கோவையில் 12-ந்தேதி தொடங்கும் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேலத்தில் 10 ஆட்டங்கள் நடக்கின்றன. வெற்றி பெறும் அணிகளுக்கு மொத்தம் ரூ.1 கோடியே 70 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.

சேலம்

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 7-வது சீசன் வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) கோவையில் தொடங்குகிறது. தொடர்ந்து அடுத்த மாதம் (ஜூலை) 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. சேலத்தில் வருகிற 24-ந்தேதி டி.என்.பி.எல். போட்டி நடக்கிறது.

இந்த தொடரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சீகம் மதுரை பேந்தர்ஸ், லைகா கோவை கிங்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், பால்சி திருச்சி ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. போட்டிகள் சேலம், திண்டுக்கல், நெல்லை, கோவை ஆகிய நகரங்களில் நடைபெற இருக்கின்றன.

சேலத்தில் 10 ஆட்டங்கள்

சேலத்தில் வருகிற 24-ந் தேதி (சனிக்கிழமை) மதியம் 3 மணிக்கு நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7 மணிக்கு சேலம் ஸ்பார்ட்டன்ஸ், சீகம் மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. 25-ந்தேதி மதியம் 3 மணிக்கு திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகளும், இரவு 7 மணிக்கு ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், பால்சி திருச்சி அணிகளும் மோதுகின்றன.

26-ந் தேதி இரவு 7 மணிக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியும், 27-ந்தேதி இரவு 7 மணிக்கு சேலம் ஸ்பார்ட்டன்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணியும் களம் காணுகின்றன. 28-ந்தேதி இரவு 7 மணிக்கு ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், 29-ந்தேதி இரவு 7 மணிக்கு சீகம் மதுரை பேந்தர்ஸ், பால்சி திருச்சி அணிகளும் மோதுகின்றன.

ஜூலை மாதம் 7-ந்தேதி இரவு 7 மணிக்கு முதலாவது தகுதி சுற்றும், 8-ந்தேதி இரவு 7 மணிக்கு வெளியேற்றுதல் சுற்றும் நடக்கிறது. அதன்படி சேலத்தில் மொத்தம் 10 ஆட்டங்கள் நடைபெறுகிறது. போட்டிகள் சேலம் அருகே வாழப்பாடியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.

ஆன்லைன் மூலம் டிக்கெட்

இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உதவி செயலாளர் ஆர்.என்.பாபா நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

டி.என்.பி.எல். போட்டியின் 7-வது சீசனில் 28 லீக், 4 நாக் அவுட் என மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மொத்தம் 25 நாட்கள் போட்டிகள் நடக்கிறது. டி.என்.பி.எல். போட்டியில் முதல் முறையாக டி.ஆர்.எஸ். முறை அமல்படுத்தப்படுகிறது. இதே போல் இம்பாக்ட் வீரர் முறையும் அறிமுகப்படுத்தப்படுகிறது. போட்டிகளை காண சாதாரண டிக்கெட் ரூ.200, உணவுடன் கூடிய டிக்கெட் ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சேலத்தில் வருகிற 13 அல்லது 14-ந்தேதி ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை தொடங்கும்.

இந்த போட்டி தொடரில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.50 லட்சம், 2-ம் பரிசு ரூ.30 லட்சம், 3 மற்றும் 4-ம் பரிசு தலா ரூ.20 லட்சம் மற்றும் 5 முதல் 8-ம் இடம் வரை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.12½ லட்சம் வீதம் என மொத்தம் ரூ.1 கோடியே 70 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.

போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி ஆகிய சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மாவட்ட அளவில் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் 37 மாவட்டங்களில் வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு 8 நகரங்களில் அவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் அடுத்த ஆண்டு முதல் பெண்களுக்கான டி.என்.பி.எல். போட்டி நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் பாபுகுமார் உடன் இருந்தார்.


Next Story