ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா? - 2-வது டெஸ்ட் டெல்லியில் இன்று தொடக்கம்


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா? - 2-வது டெஸ்ட் டெல்லியில் இன்று தொடக்கம்
x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தனது ஆதிக்கத்தை நீட்டிக்கும் முனைப்புடன் இந்திய அணி இன்று 2-வது டெஸ்டில் களம் இறங்குகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணியினரும் சில தினங்களாக பல்வேறு வியூகங்களுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

நாக்பூரில் நடந்த தொடக்க டெஸ்டில் ஆடுகளம் சுழலுக்கு சொர்க்கபுரியாக திகழ்ந்தது. இதில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவின் (இருவரும் கூட்டாக 15 விக்கெட் எடுத்தனர்) சுழல் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திண்டாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 177 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 91 ரன்னிலும் சுருண்டது. அதே சமயம் முதல் இன்னிங்சில் இந்தியா கேப்டன் ரோகித் சர்மாவின் அபார சதம் (120 ரன்) மற்றும் ஜடேஜா, அக்ஷர் பட்டேலின் அரைசதத்தால் 400 ரன்கள் குவித்தது. 3-வது நாளிலேயே ஆஸ்திரேலியாவின் கதையை நமது பவுலர்கள் முடித்து வைத்தனர்.

இன்றைய டெஸ்டுக்கான ஆடுகளமும் மெதுவான தன்மையுடன், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆடுகளம் வறண்டு காணப்படுவதால் சீக்கிரமே வெடிப்பு ஏற்பட்டு சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த டெஸ்டிலும் அஸ்வின், ஜடேஜாவின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

100-வது டெஸ்டில் புஜாரா

பேட்டிங்கை எடுத்துக் கொண்டால் விராட் கோலி, புஜாரா முதல் டெஸ்டில் சோபிக்கவில்லை. கோலிக்கு இது சொந்த ஊர் மைதானமாகும். புஜாராவுக்கு இது 100-வது டெஸ்ட் போட்டியாகும். இதற்கு முன்பு 12 இந்தியர்கள் 100 டெஸ்டுக்கு மேல் விளையாடி உள்ளனர். ஆனால் எந்த இந்தியரும் தனது 100-வது டெஸ்டில் சதம் அடித்ததில்லை. எனவே புஜாரா செஞ்சுரி டெஸ்டில் செஞ்சுரி போட்டு சாதனை படைப்பாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

முதுகுவலி பிரச்சினையால் முதல் டெஸ்டில் ஒதுங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் தற்போது அணியுடன் இணைந்து விட்டார். அவர் முழு உடல்தகுதியுடன் இருந்தால் இந்த டெஸ்டில் களம் காணுவார் என்பதை பயிற்சியாளர் டிராவிட் தெளிவுப்படுத்தியுள்ளார். அவர் ஆடும் லெவனில் இடம் பிடித்தால் சூர்யகுமார் யாதவ் வெளியே உட்கார வைக்கப்படுவார். கடந்த 8 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்காத துணை கேப்டன் லோகேஷ் ராகுல் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்.

மற்றபடி அணியில் மாற்றம் இருக்காது. தொடக்க டெஸ்ட் போன்றே இந்த டெஸ்டிலும் ஆதிக்கம் செலுத்தும் வேட்கையுடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர். எஞ்சிய 3 டெஸ்டுகளில் குறைந்தது இந்தியா 2 டெஸ்டுகளில் வெற்றி பெற்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும். அத்துடன் டெஸ்ட் தரவரிசையில் 'நம்பர் ஒன்' இடத்தையும் எட்டிப்பிடிக்க முடியும். அதனால் இந்த டெஸ்ட் வெற்றி இந்தியாவுக்கு மிகவும் அவசியமாகும்.

ஆஸ்திரேலிய அணியில் மாற்றம்

தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து மிகுந்த நம்பிக்கையுடன் இந்திய மண்ணில் கால்பதித்த கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடக்க டெஸ்டில் துளி கூட போராடாமல் ஒரேயடியாக சரண் அடைந்தது. முதல் இன்னிங்சில் ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன் மட்டும் சற்று தாக்குப்பிடித்து ஆடினர். தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா இரு இன்னிங்சிலும் சொதப்பினர்.

ஆஸ்திரேலிய ஊடகங்கள் ஆடுகளம் குறித்து தொடர்ந்து குறைகூறி வரும் நிலையில் ஆஸ்திரேலிய வீரர்களோ அதை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு இது போன்ற ஆடுகளத்திலும் சாதிப்பது எப்படி என்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த அணியில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும். ஸ்காட் போலன்ட் நீக்கப்பட்டு காயத்தில் இருந்து மீண்டு வரும் மிட்செல் ஸ்டார்க், கிரீன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. 3-வது சுழற்பந்து வீச்சாளர் இடத்துக்கு மேத்யூ குனேமேன், ஆஷ்டன் அகர் பெயர் பரிசீலிக்கப்படுகிறது.

கம்மின்ஸ் பேட்டி

இது குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் நேற்று அளித்த பேட்டியில், 'ஆஸ்திரேலியாவில் உள்ள பவுன்ஸ் ஆடுகளங்களில் பந்துவீசி பழக்கப்பட்ட எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் இங்குள்ள மெதுவான ஆடுகளத்தில் தடுமாறுகிறார்கள். ஆடுகளத்தன்மைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டு பந்துவீசுவது முக்கியம். நாக்பூர் ஆடுகளத்தின் மண் சிவப்பு நிறத்தில் இருந்தது. டெல்லி ஆடுகளத்தின் மண் கருப்பாக தெரிகிறது. ஆனால் ஆடுகளத்தன்மை ஒரே மாதிரியே தோன்றுகிறது. இதுவும் சுழற்பந்து வீச்சுக்கு உதவிகரமாக இருக்கும் என்று நினைக்கிறேன். மிட்செல் ஸ்டார்க், கேமரூன் கிரீன் ஆகியோரது உடல்தகுதியை மீண்டும் ஒரு முறை சோதித்து விட்டு அதற்கு ஏற்ப ஆடும் லெவன் அணியை முடிவு செய்வோம். ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் உடல்தகுதியை எட்டினால் 3-வது சுழற்பந்து வீச்சாளரை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கிறோம். சுழற்பந்து வீச்சாளர்கள் குனேமேன், ஆஷ்டன் அகர் இருவரும் கடந்த இரு நாட்கள் நீண்ட நேரம் பயிற்சி செய்தனர். மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். எனவே 3-வது சுழற்பந்து வீச்சாளர் தேவைப்பட்டால் இருவரில் ஒருவரை தேர்வு செய்வதில் எந்த சிக்கலும் இருக்காது.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 'பாக்சிங் டே' டெஸ்டில் அதிரடியாக விளையாடி எதிரணி பவுலர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்த வார்னர், அதே போன்று விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன்.' என்றார்.

மொத்தத்தில் சரிவில் இருந்து மீண்டு ஆஸ்திரேலியா பதிலடி கொடுக்குமா? அல்லது இந்தியாவின் சுழல் வலையில் சிக்கி மறுபடியும் சிதறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, கே.எஸ்.பரத், அஸ்வின், அக்ஷர் பட்டேல், முகமது ஷமி, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா: வார்னர், உஸ்மான் கவாஜா, லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி, ரென்ஷா அல்லது டிராவிஸ் ஹெட், கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், டாட் மர்பி.

காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

மைதான கண்ணோட்டம்

டெல்லியில் 1948-ம் ஆண்டில் இருந்து இதுவரை 34 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்தியா 13-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும் கண்டுள்ளது. 15 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. 1987-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மைதானத்தில் இந்திய அணி தோற்றதில்லை. அதன் பிறகு இங்கு இந்திய அணி 12 டெஸ்டில் விளையாடி 10-ல் வெற்றியும், 2-ல் டிராவும் சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா இங்கு 7 டெஸ்டில் விளையாடி ஒன்றில் மட்டும் (1959-ம் ஆண்டு) வெற்றி பெற்றுள்ளது. 3-ல் தோல்வியும், 3-ல் 'டிரா'வும் சந்தித்துள்ளது.

1959-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுக்கு 644 ரன்கள் குவித்தது இந்த ஸ்டேடியத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். 1987-ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா 75 ரன்னில் ஆல்-அவுட் ஆனது குறைந்தபட்சமாகும். 2017-ம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 243 ரன்கள் எடுத்தது தனிநபர் அதிகபட்சமாகும். இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில்கும்பிளே ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் (1999-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக) சாய்த்து உலக சாதனை படைத்த மைதானமும் இது தான்.

புஜாராவின் கனவு

இந்திய வீரர் 35 வயதான புஜாரா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் நிறைய சாதித்துள்ளேன். அது மனநிறைவை தந்துள்ளது. 100-வது டெஸ்டில் விளையாட இருப்பது உண்மையிலேயே பரவசமூட்டுகிறது. அதே சமயம் மிகவும் முக்கியமான டெஸ்ட் தொடரில் நாங்கள் விளையாடிக்கொண்டிருக்கிறோம். 2-வது டெஸ்டிலும், 3-வது டெஸ்டிலும் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிசுற்றுக்கு தகுதி பெறுவோம் என்று நம்புகிறேன். இந்திய அணிக்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எனது கனவு. கடந்த முறை இறுதி ஆட்டத்தில் தோற்றதால் அது நடக்காமல் போய் விட்டது. ஆனால் இந்த முறை இறுதிப்போட்டியை எட்டியதும் வெற்றியை நோக்கி பயணிப்போம்' என்றார்.


Next Story