இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்தும் கம்மின்ஸ் விலகல்..!


இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்தும் கம்மின்ஸ் விலகல்..!
x

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்தும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் விலகினார்.

ஆமதாபாத்,


இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த பேட் கம்மின்ஸ் டெல்லியில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டி முடிந்ததும் தனது தாயார் மரியா கவலைக்கிடமாக இருப்பதாக கிடைத்த செய்தியை அடுத்து உடனடியாக நாடு திரும்பினார். இதனால் இந்தூரில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை ஸ்டீவன் சுமித் வழிநடத்தினார்.

முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி ஸ்டீவன் சுமித் தலைமையில் 3-வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 2004-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா ருசித்த முதல் வெற்றி இதுவாகும். என்றாலும் ஆஸ்திரேலியா தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் போட்டிக்குள் கம்மின்ஸ் இந்தியா வருவாரா? என்பதில் கேள்விக்குறி நிலவியது. மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது தாயாரின் உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருப்பதால் கம்மின்ஸ் சிட்னியில் குடும்பத்தினருடன் தங்கி இருக்க முடிவு செய்துள்ளார். இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'ஆஸ்திரேலியாவில் தனது குடும்பத்தினருடன் தொடர்ந்து இருக்க வேண்டி இருப்பதால் இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து கம்மின்ஸ் விலகி இருக்கிறார். கடைசி டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவன் சுமித் கேப்டனாக இருப்பார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டி முடிந்ததும் ஒருநாள் தொடர் 17, 19, 22 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டி தொடரிலும் கேப்டன் கம்மின்ஸ் கலந்து கொள்வது சந்தேகம் தான். இது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச போட்டிகள் அதிகமாக இருப்பதால் கம்மின்ஸ் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வரும் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜய ரிச்சர்ட்சன் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் நாதன் எலிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சீசனுக்கான ஐ.பி.எல். போட்டியிலும் ஜய ரிச்சர்ட்சன் (மும்பை இந்தியன்ஸ்) ஆடுவது கடினம் தான் என்று தெரிகிறது.


Next Story