இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின் ஓய்வு
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
லண்டன்,
வேகப்பந்து வீச்சாளர்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின், சில ஆண்டுகள் முன்னணி பவுலராக வலம் வந்தார். 2010-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்த அவர் 2017-ம் ஆண்டுக்கு பிறகு தேசிய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். உள்ளூர் கவுண்டி அணியான மிடில்செக்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடிய அவர் அதன் பிறகு சஸ்செக்ஸ் அணிக்கு மாறினார். கால்முட்டியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படும் அவருக்கு அந்த காயம் குணமடையவில்லை. இதனால் கிரிக்கெட்டுக்கு தனது 34-வது வயதிலேயே முழுக்கு போட்டுள்ளார்.
இது குறித்து ஸ்டீவன் பின் கூறுகையில், 'இன்று (நேற்று) முதல் எல்லா வகையான கிரிக்கெட்டில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுகிறேன். கடந்த 12 மாதங்களாக காயத்தில் இருந்து மீள்வதற்காக எனது உடலோடு போராடினேன். இறுதியில் தோல்வியே மிஞ்சியது. சில வியப்புக்குரிய நினைவுகளோடு கிரிக்கெட்டில் இருந்து விலகுகிறேன். இங்கிலாந்து அணிக்காக 36 டெஸ்ட் உள்பட ஒட்டுமொத்தத்தில் 125 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளேன்.
இங்கிலாந்து அணிக்காக விளையாடுவது தான் கனவாக இருந்தது. இவ்வளவு போட்டிகளில் விளையாடுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. கடந்த 12 மாதங்களாக எனக்கு பக்கபலமாக இருக்கும் சஸ்செக்ஸ் நிர்வாகத்துக்கு நன்றி. கிரிக்கெட் தான் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. எதிர்காலத்தில் ஏதாவது ஒரு வகையில் கிரிக்கெட்டுடன் தொடர்பில் இருப்பேன் என்று நம்புகிறேன்' என்றார்.
'ஹாட்ரிக்' சாதனை
ஸ்டீவன் பின் இதுவரை 36 டெஸ்டுகளில் விளையாடி 125 விக்கெட்டுகளும், 69 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 102 விக்கெட்டும், 21 இருபது ஓவர் கிரிக்கெட்டில் ஆடி 27 விக்கெட்டும் கைப்பற்றி இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2010-11, 2013, 2015-ம் ஆண்டுகளில் ஆஷஸ் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் அங்கம் வகித்தார். பிரிஸ்பேனில் ஆஷஸ் அறிமுக டெஸ்டில் 6 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்து வீச்சில் ஒன்றாக பதிவானது.
2015-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பிராட் ஹேடின், மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க் ஆகியோரின் விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தி 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார். 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்திய ஒரே இங்கிலாந்து பவுலர் இவர் தான்.