"தோல்வி மிகுந்த வேதனை அளிக்கிறது" - ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் கருத்து


தோல்வி மிகுந்த வேதனை அளிக்கிறது - ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் கருத்து
x

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, தென்ஆப்பிரிக்காவிடமும் அடங்கியது.

லக்னோ,

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று அரங்கேறிய 10-வது லீக்கில் தென்ஆப்பிரிக்க அணி, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் மோதியது. ஆஸ்திரேலிய அணியில் இரு மாற்றமாக கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி நீக்கப்பட்டு மார்கஸ் ஸ்டோனிஸ், ஜோஷ் இங்லிஸ் சேர்க்கப்பட்டனர். தென்ஆப்பிரிக்க அணியில் ஜெரால்டு கோட்ஜீக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி இடம் பிடித்தார்.

டி காக் சதம்

'டாஸ்' ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து குயின்டான் டி காக்கும், கேப்டன் பவுமாவும் தென்ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். சில ஓவர்கள் எச்சரிக்கையுடன் ஆடிய இவர்கள் அதன் பிறகு வேகம் காட்டினர். அந்த அணி 17.4 ஓவர்களில் 100-ஐ தொட்டது.

வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் மேக்ஸ்வெல் பிரித்தார். அவரது பந்து வீச்சில் பவுமா 35 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த வான்டெர் டஸன் 26 ரன்னில் வெளியேறினார்.

3-வது விக்கெட்டுக்கு குயின்டான் டி காக்குடன், மார்க்ரம் இணைந்து ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். ஹேசில்வுட் ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்சரை விளாசி மிரட்டிய டி காக், கம்மின்சின் பந்து வீச்சில் சிக்சருடன் தனது 19-வது சதத்தை நிறைவு செய்தார். இந்த உலகக் கோப்பையில் அவரது 2-வது சதமாகும். ஏற்கனவே இலங்கைக்கு எதிராகவும் சதம் கண்டிருந்தார்.

ஸ்கோர் 197-ஐ எட்டிய போது டி காக் 109 ரன்களில் (106 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்) மேக்ஸ்வெலின் சுழலில் போல்டு ஆனார். இதன் பின்னர் மார்க்ரம் (56 ரன், 44 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஹென்ரிச் கிளாசென் (29 ரன்), டேவிட் மில்லர் (17 ரன்), மார்கோ யான்சென் (26 ரன்) ஆகியோரின் கணிசமான பங்களிப்புடன் தென்ஆப்பிரிக்கா 300 ரன்களை கடந்தது.

50 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுக்கு 311 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய தரப்பில் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.



ஆஸ்திரேலியா தோல்வி

அடுத்து 312 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை, தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் திணறடித்தனர். மிட்செல் மார்ஷ் (7 ரன்), டேவிட் வார்னர் (13 ரன்), ஸ்டீவன் சுமித் (19 ரன்) ஆகியோர் முதல் 10 ஓவருக்குள் நடையை கட்டினர்.

இதனால் அதல பாதாளத்துக்கு தள்ளப்பட்ட ஆஸ்திரேலிய அணியால் அதில் இருந்து மீள முடியவில்லை. எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் (3 ரன்), ஸ்டோனிஸ் (5 ரன்) சோபிக்கவில்லை. லபுஸ்சேன் (46 ரன்), மிட்செல் ஸ்டார்க் (27 ரன்), கேப்டன் கம்மின்ஸ் (22 ரன்) ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோர் 150-ஐ கடக்க வைத்தனர். இல்லாவிட்டால் அவர்களின் நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும்.

முடிவில் ஆஸ்திரேலியா 40.5 ஓவர்களில் 177 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்கா 134 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. ரபடா 3 விக்கெட்டும், யான்சென், கேஷவ் மகராஜ், ஷம்சி தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

தென்ஆப்பிரிக்காவுக்கு இது 2-வது வெற்றியாகும். தனது முதல் ஆட்டத்தில் இலங்கையை பந்தாடி இருந்தது. ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வியாகும். ஏற்கனவே இந்தியாவிடம் சறுக்கி இருந்தது.

ஸ்டோனிஸ் அவுட்டில் சர்ச்சை

ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் (5 ரன்) வேகப்பந்து வீச்சாளர் ரபடா லெக்சைடில் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கிடம்கேட்ச் ஆனார். டி.வி. ரீப்ளேயில் பந்து ஸ்டோனிசின் வலது கையுறையில் பட்ட போது அந்த கை பேட்டில் இருந்து விலகி இருந்தது. இதனால் அவுட் கொடுத்திருக்கக்கூடாது என்று ஸ்டோனிஸ் வாதிட்டார். ஆனால் 3-வது நடுவர் ரிச்சர்ட் கெட்டில்போரப் வலது கை பேட்டுடன் இல்லை என்றாலும் அந்த கையுறை பேட்டை பிடித்திருந்த இடக்கை கையுறையில் உரசிக்கொண்டு இருந்ததால் இது அவுட் தான் என்று விளக்கம் அளித்தார். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

கம்மின்ஸ் கருத்து

ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில், 'தென்ஆப்பிரிக்காவை 311 ரன்னில் கட்டுப்படுத்தியது மகிழ்ச்சி அளித்தது. இதை இலக்கை எடுத்து விடலாம் என்று நினைத்தோம். ஆனால் அவர்களின் பந்து வீச்சாளர்கள் உண்மையிலேயே சிறப்பாக பந்து வீசி கட்டுப்படுத்தி விட்டனர். தோல்வி மிகுந்த வேதனை அளிக்கிறது. தவறுகளை திருத்திக் கொண்டு அடுத்த ஆட்டத்தில் வலுவாக மீண்டு வர முயற்சிப்போம். சில விஷயங்களை சரி செய்ய வேண்டி உள்ளது. இந்த உலகக்கோப்பையில் சவாலான ஒரு அணியாக இருக்க விரும்பினால், எல்லாவிதமான சீதோஷ்ண நிலைக்கு தகுந்தபடி மாற்றிக்கொண்டு செயல்பட வேண்டும்' எனறார்.

நடப்பு தொடரில் 12-வது சதம்

இந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க வீரர் குயின்டான் டி காக் 109 ரன்கள் எடுத்தார். நடப்பு தொடரில் அடிக்கப்பட்ட 12-வது சதம் இதுவாகும். ஒரு உலகக் கோப்பையில் முதல் 10 ஆட்டங்களில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சதங்கள் இது தான். இதற்கு முன்பு 2003-ம் ஆண்டு உலகக் கோப்பையில் முதல் 10 ஆட்டங்களில் 7 சதங்கள் பதிவானதே அதிகபட்சமாக இருந்தது.

முதல்முறையாக....

* உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா தனது முதல் இரு ஆட்டங்களில் தோற்பது 1992-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

* 2019-ம் ஆண்டு உலகக் ேகாப்பையில் கடைசி இரு ஆட்டங்களில் (தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக) தோல்வியை தழுவிய ஆஸ்திரேலியா இந்த உலகக் கோப்பையிலும் முதல் இரு ஆட்டங்களில் உதை வாங்கி இருக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் தோற்பது இதுவே முதல் முறையாகும்.

* ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையில் 300 ரன்களுக்கு மேலான இலக்கை ஒரு போதும் வெற்றிகரமாக விரட்டிப்பிடித்தது (சேசிங்) கிடையாது. அந்த பரிதாபம் மீண்டும் ஒரு முறை தொடருகிறது.

* ஆஸ்திரேலிய அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் தோற்று இருக்கிறது. உலகக் கோப்பையில் ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவின் பெரிய தோல்வி இதுவாகும். இதற்கு முன்பு 1983-ம் ஆண்டு இந்தியாவிடம் 118 ரன்கள் வித்தியாசத்தில் சரண் அடைந்து இருந்தது.



7 கேட்ச் தவற விட்ட ஆஸ்திரேலியா

மார்க்ரம் ஒரு ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை நழுவ விட்ட ஏமாற்றத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் பீல்டிங் மோசமாக இருந்தது. அவர்கள் 7 கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டனர். இதில் மார்க்ரம், மில்லர் ஆகியோரின் கேட்ச்களை விட்டதும் அடங்கும்.

முதல் இரு ஆட்டங்களில் தோற்றதால் இப்போது ஆஸ்திரேலியா கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. எஞ்சிய 7 லீக்கில் குறைந்தது 6-ல் வெற்றி பெற்றால் தான் அந்த அணி அரைஇறுதி பற்றி நினைத்து பார்க்க முடியும்.

ராசி இல்லாத டாஸ்

இந்த உலகக் கோப்பை திருவிழாவில் இதுவரை 10 ஆட்டங்கள் நடந்துள்ளன. இதில் டாஸில் ஜெயித்த அணிகள் 8 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளன.


Next Story