2-வது டெஸ்டில் தோல்வி; திடீரென சொந்த நாடு திரும்பிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன்


2-வது டெஸ்டில் தோல்வி; திடீரென சொந்த நாடு திரும்பிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன்
x

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் தோல்வி அடைந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் திடீரென சொந்த நாடு திரும்பியுள்ளார்.



புதுடெல்லி,


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 4 போட்டிகள் கொண்ட தொடரில், 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கும்மின்ஸ் திடீரென தனது சொந்த நாட்டுக்கு திரும்பி உள்ளார். சில நாட்கள் அவர் ஆஸ்திரேலியாவில் தங்குகிறார். அவரது குடும்பத்தில் ஏற்பட்ட தீவிர சுகாதார பிரச்சனைகளை முன்னிட்டு நாடு திரும்பியுள்ளார்.

எனினும், 3-வது டெஸ்டில் கலந்து கொள்வதற்காக மீண்டும் அவர் இந்தியாவுக்கு வந்து அதற்காக தயாராவார் என தகவல் தெரிவிக்கின்றது. இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் 1-ந்தேதி இந்தூர் நகரில் நடைபெற உள்ளது.

பேட் கும்மின்ஸ் சரியான நேரத்தில் இந்தியாவுக்கு வருவார் என்றபோதிலும், அவர் வரமுடியாதபோது, துணை கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அணியை வழி நடத்தி செல்வார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டனாக 2021-ம் ஆண்டு இறுதியில், கும்மின்ஸ் அறிவிக்கப்பட்ட பின்னர், 2 முறை ஸ்மித் அணியை வழி நடத்தி சென்று உள்ளார். 2021-22 காலகட்டத்தில் நடந்த ஆஷஸ் தொடரின்போது, கும்மின்சுக்கு கொரோனா பாதிப்பு நோயாளியுடனான நெருங்கிய தொடர்பால் 2-வது டெஸ்ட் போட்டியை கும்மின்ஸ் தவற விட்டார்.

இதேபோன்று கடந்த ஆண்டில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டியின்போதும், கும்மின்ஸ் காயத்தினால் போட்டியில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அணியை ஸ்மித் அப்போது தலைமையேற்று நடத்தினார்.

டெஸ்ட் போட்டி தொடரை தொடர்ந்து, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் கும்மின்ஸ் கேப்டனாக செயல்பட உள்ளார்.


Next Story