சிராஜ் அபார பந்துவீச்சு..! வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது


சிராஜ் அபார பந்துவீச்சு..!  வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
x

Image Courtesy : ICC Twitter 

183 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

போர்ட் ஆப் ஸ்பெயின்,

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்து வருகிறது.

இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 2-வது நாளில் 438 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. 500-வது சர்வதேச போட்டியில் ஆடும் விராட்கோலி (121 ரன்கள்) சதமும், கேப்டன் ரோகித் சர்மா (80 ரன்கள்), ரவீந்திர ஜடேஜா (61 ரன்கள்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (57 ரன்கள்), ஆர்.அஸ்வின் (56 ரன்கள்) ஆகியோர் அரைசதமும் அடித்தனர். வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் கெமார் ரோச், ஜோமெல் வாரிகன் தலா 3 விக்கெட்டும், ஜாசன் ஹோல்டர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி 2-வது நாள் முடிவில் 41 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர் தேஜ்நரின் சந்தர்பால் 33 ரன்னில் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் 37 ரன்னுடனும், கிர்க் மெக்கென்சி 14 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்து நல்ல தொடக்கம் ஏற்படுத்தினர். ஸ்கோர் 117 ரன்னாக உயர்ந்த போது கிர்க் மெக்கென்சி 32 ரன்னில் (57 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் பந்து வீச்சில், விக்கெட் கீப்பர் இஷான் கிஷனிடம் சிக்கினார்.

தொடர்ந்து ஜெர்மைன் பிளாக்வுட், தொடக்க வீரர் பிராத் வெய்ட்டுடன் ஜோடி சேர்ந்தார். 170 பந்துகளில் அரைசதத்தை கடந்த பிராத்வெய்ட் 75 ரன்னில் அஸ்வின் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து களமிறங்கிய பிளாக்வுட் 20 ரன்களும், டி சில்வா 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 3-ஆம் நாள் ஆட்டம் நேர முடிவில் 108 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 5 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. அலிக் அதானேஷ் 37 ரன்னுடனும், ஜேசன் ஹோல்டர் 11 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர் இன்று 4-ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது.

தொடக்கத்தில் அலிக் அதானேஷ் 37 ரன்களுக்கு முகேஷ் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஜேசன் ஹோல்டர் 15 ரன்கள் , அல்ஜாரி ஜோசப் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 115.4 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது .இந்தியா சார்பில் சிராஜ் 5 விக்கெட் , முகேஷ்குமார் , ஜடேஜா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.இதனை தொடர்ந்து 183 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.


Related Tags :
Next Story