'உலக கிரிக்கெட்டில் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அவர்தான்'- இந்திய வீரரை பாராட்டிய சோயப் மாலிக்
இந்திய அணி ஆரம்பத்திலேயே 2 - 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் கேஎல் ராகுல் அந்த சூழலுக்கேற்ப விளையாடுகிறார்.
கராச்சி,
இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் நேற்றுடன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்றன. லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. அரையிறுதி ஆட்டங்கள் நாளை மறுநாள் தொடங்க உள்ளன.
இந்த தொடரில் இந்தியா தங்களுடைய 9 லீக் ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து கம்பீரமாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. குறிப்பாக நெதர்லாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் 160 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக அரையிறுதி சுற்றில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளது.
நெதர்லாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அட்டகாசமாக விளையாடிய கேஎல் ராகுல் 102 ரன்கள் குவித்து அசத்தினார். குறிப்பாக 62 பந்துகளில் 100 ரன்கள் தொட்ட அவர் உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த இந்திய வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்தார். கடந்த வருடம் ரொம்பவே தடுமாறியதால் கிண்டல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளான அவர் இந்த உலகக்கோப்பையில் மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அபாரமாக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்தியா தடுமாறியபோது 97 ரன்கள் குவித்து அதிரடியில் அசத்திய ராகுல் தென்னாப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாஸென் போன்றவர்களை விட 2023 உலகக்கோப்பையின் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக செயல்படுவதாக சோயப் மாலிக் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "கேஎல் ராகுல் உலக கிரிக்கெட்டில் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருக்கிறார். கிளாஸென் நல்ல துவக்கம் கிடைத்தால் மட்டுமே மிடில் ஆர்டரில் அசத்துகிறார். ஆனால் எந்த சூழ்நிலையிலும் அசத்தக்கூடிய சிறந்த பேட்ஸ்மேன் இந்திய அணியில்தான் இருக்கிறார். குறிப்பாக ஆரம்பத்திலேயே இந்திய அணி 2 - 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் கேஎல் ராகுல் அந்த சூழலுக்கேற்ப விளையாடுகிறார். அதே சமயம் தேவைப்பட்டால் அவர் அதிரடியாக விளையாடி பினிஷிங் செய்யும் திறமையும் கொண்டுள்ளார். வேகம் மற்றும் சுழல் பவுலர்களுக்கு எதிராக நன்றாக விளையாடுகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் பினிஷிங் செய்ததை நாம் பார்த்தோம்" என்று கூறியுள்ளார்.