ஐ.பி.எல். தொடரின் போது ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்க தயார் - மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் பவுச்சர் பேட்டி


ஐ.பி.எல். தொடரின் போது ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்க தயார் - மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் பவுச்சர் பேட்டி
x

image courtesy: ICC twitter via ANI

ஐ.பி.எல். போட்டி தொடரின் போது, ரோகித் சர்மா விரும்பினால் அவருக்கு ஓய்வு கொடுக்க தயாராக இருப்பதாக மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் பவுச்சர் கூறியுள்ளார்.

மும்பை,

10 அணிகள் இடையிலான 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் தனது முதல் ஆட்டத்தில் வருகிற 2-ந்தேதி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பெங்களூருவில் எதிர்கொள்கிறது. கடந்த சீசனில் கடைசி இடத்தை பெற்று விமர்சனத்திற்குள்ளான மும்பை அணி இந்த முறை எழுச்சி பெறும் உத்வேகத்துடன் தயாராகி வருகிறது. இதையொட்டி மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஐ.பி.எல். மட்டுமல்ல, நாங்கள் எப்போது களம் இறங்கினாலும் எதிர்பார்ப்பு இருக்கத் தான் செய்யும். பல ஆண்டுகள் விளையாடி விட்ட எனக்கு இத்தகைய எதிர்பார்ப்பால் பிரச்சினை இல்லை. அது பற்றி கவலைப்படுவதும் இல்லை. கோப்பையை வெல்வதற்கு எங்களது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது தெரியும். அது குறித்தே எல்லாநேரமும் சிந்திப்பதால் அது எங்களுக்குள் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இளம் வீரர்களுக்கு குறிப்பாக இதற்கு முன்பு ஐ.பி.எல்.-ல் ஆடாத வீரர்களுக்கு அதிக அளவில் நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை. முதல்தர கிரிக்கெட் அல்லது கிளப் கிரிக்கெட்டுகளில் எந்த மாதிரி விளையாடினீர்களோ அதே போன்று இங்கு ஆடும்படி அவர்களிடம் சொல்வேன். அதில் இருந்து ஐ.பி.எல். கிரிக்கெட் வேறுபட்டது தான். ஆனாலும் அவர்களை அந்த மனநிலைக்கு கொண்டு வர முயற்சிப்பேன்.

காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகி இருப்பது எங்களுக்கு இழப்பாகும். ஆனால் இது இன்னாரு வீரருக்கு வாய்ப்பாக அமையும். இதே அணியில் கடந்த 2 ஆண்டுகள் விளையாடும் ஓரிரு பவுலர்கள் அவரது இடத்தை நிரப்புவதற்கு தயாராக உள்ளனர். பும்ரா இல்லாததால் சில இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வருகை தந்துள்ளார். கடந்த ஆண்டு அணியில் இடம் பெற்றிருந்தாலும் காயத்தால் விளையாட முடியாமல் போனது. அவர் எப்படிப்பட்ட பவுலர் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

இந்த சீசனில், 'தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்' விதிமுறை கொண்டு வரப்படுகிறது. இது குறித்து நாங்கள் ஏற்கனவே விவாதித்துள்ளோம். ஒரு சில ஆட்டங்களுக்கு பிறகு எப்படி இந்த விதிமுறையை சிறப்பாக கையாள்வது என்பது தெரியும். அதிர்ஷ்டவசமாக சில ஆட்டங்களுக்கு பிறகே எங்கள் அணிக்குரிய முதல் போட்டி வருகிறது. அதனால் மற்ற அணிகள் இந்த விதிமுறையை எப்படி பயன்படுத்தி பலன் அடைகின்றன என்பதை உன்னிப்பாக கவனிப்போம். எங்களது தொடக்க ஆட்டத்தில் (பெங்களூருவுக்கு எதிராக) களம் காணும் 12 வீரர்களில் (தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்று வீரரையும் சேர்த்து) 9 பேரை இறுதி செய்து விட்டோம். இன்னும் ஓரிரு இடத்திற்கு பொருத்தமான வீரர் யார் என்பதை ஆலோசித்து முடிவு செய்வோம்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

மும்பை அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மார்க் பவுச்சர் கூறுகையில், 'முக்கியமான சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டி இருப்பதால் பணிச்சுமையை கருத்தில் கொண்டு ரோகித் சர்மாவுக்கு லீக் சுற்றின் போது ஓய்வு அளிக்கப்படுமா? என்று கேட்கிறீர்கள். அவர் மும்பை அணியின் கேப்டன். அவர் ஓய்வை விரும்பமாட்டார் என்று நம்புகிறேன். எதுவாகினும் சூழலுக்கு தக்கபடி முடிவு செய்வோம். ஒரு வேளை அவர் ஒன்றிரண்டு ஆட்டங்களுக்கு ஓய்வு தேவை என்று கேட்டால், ஓய்வு அளிக்கப்படும். அதில் எந்த பிரச்சினையும் இல்லை.

வீரர்களின் பணிச்சுமை குறித்து இப்போது நிறைய பேசுகிறார்கள். எங்கள் அணிக்குரிய போட்டி அட்டவணையை பார்த்தால், ஒவ்வொரு ஆட்டத்திற்கும் இடையே ஓரளவு ஓய்வு கிடைப்பது தெரியும். அதனால் எங்கள் அணியில் வேலைப்பளு என்பது பெரிய பிரச்சினையாக இருக்காது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடும் போது உடலுக்கு கடினமாக இருக்கும். ஆனால் 20 ஓவர் போட்டி குறுகிய நேரத்தில் முடிந்து விடும். எனவே 20 ஓவர் கிரிக்கெட்டில் வீரர்களுக்கான பணிச்சுமை குறித்து நாம் பேசுவது தேவையற்றது' என்றார்.

மேலும் பவுச்சர் கூறும் போது, 'ஒரு நாள் கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து 3 ஆட்டங்களில் முதல் பந்திலேயே டக்-அவுட் ஆனது குறித்து கேட்கிறீர்கள். சூர்யகுமார் நன்றாக இருக்கிறார். அவர் எத்தகைய மனநிலையில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள அவரிடம் பேசினேன். அப்போது அவர் 'நான் பந்தை நன்றாக அடித்து ஆடுகிறேன்' என்று கூறினார். அதற்கு நான், 'பதற்றமின்றி அமைதியாக இருங்கள்' என்று சொன்னேன். ஒரு வீரர் முதல் பந்தை தாண்டவில்லை என்பதற்காக அவர் நல்ல ஆட்டத்திறனுடன் இல்லை என்று சொல்ல முடியாது. துரதிர்ஷ்டவசமாக அவர் 3 ஆட்டங்களிலும் முதல் பந்திலேயே வெளியேறி விட்டார். ஐ.பி.எல்.-ல் அவர் முதல் பந்தை சந்திக்கும் போது, ஒட்டுமொத்த ரசிகர்கள் கூட்டமும் அவரை உற்சாகப்படுத்தும். அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என்று நம்புகிறேன். தற்போது உலகின் மிகச்சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரராக அவர் விளங்குகிறார்' என்றார்.


Next Story