முழு உடல்தகுதியை எட்டாவிட்டாலும் 3-வது டெஸ்டில் விளையாட தயார் - ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் பேட்டி


முழு உடல்தகுதியை எட்டாவிட்டாலும் 3-வது டெஸ்டில் விளையாட தயார் - ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் பேட்டி
x

image courtesy: ICC via ANI

முழு உடல்தகுதியை எட்டாவிட்டாலும் 3-வது டெஸ்டில் விளையாட தயார் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் பேட்டி அளித்துள்ளார்.

இந்தூர்,

விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாவிட்டாலும் இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் விளையாடும் அளவுக்கு தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய பவுலர் ஸ்டார்க் கூறியுள்ளார்.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தூரில் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சி மேற்கொண்டனர். குறிப்பாக துணை கேப்டன் பதவியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ள லோகேஷ் ராகுலும், அவரது இடத்துக்கு குறி வைத்துள்ள இளம் வீரர் சுப்மன் கில்லும் ஒரே நேரத்தில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் மேற்பார்வையில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டது கவனத்தை ஈர்த்தது.

இதே போல் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வீரர்கள் 'ஸ்வீப் ஷாட்டு'களுக்கு பதிலாக முன்காலை எடுத்து வைத்து சுழற்பந்தை தடுத்து ஆடுவதிலும், கிரீசை விட்டு சில அடி இறங்கி வந்து பந்தை தூக்கியடிப்பதிலும் கவனம் செலுத்தினர்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக டிசம்பர் மாதம் மெல்போர்னில் நடந்த டெஸ்டில் பீல்டிங்கின் போது இடதுகை நடு விரலில் காயமடைந்த ஆஸ்திரேலிய இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், இந்தியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டில் ஆடவில்லை. வலை பயிற்சியில் அதிவேகமாக பந்து வீசிய அவர் 3-வது டெஸ்டில் ஆடும் லெவனில் இடம்பெறுவார் என்று தெரிகிறது.

பயிற்சிக்கு பின்னர் 33 வயதான ஸ்டார்க் நிருபர்களிடம் கூறுகையில், 'நான் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். என்றாலும் 100 சதவீதம் முழு உடல்தகுதியை இன்னும் எட்டவில்லை. ஆனால் 3-வது டெஸ்டில் களம் இறங்குவதற்கு ஏற்ப போதுமான தகுதியுடன் இருப்பதாக நினைக்கிறேன். என்னால் பந்தை நன்றாக வீச முடிகிறது. உடல்தகுதி விஷயத்தில் சிறுசிறு அசவுகரியங்கள் இருக்கத் தான் செய்யும். 100 சதவீதம் முழு உடல்தகுதி அடைந்த பிறகு தான் விளையாட வேண்டும் என்று இருந்தால், இப்போது நான் 5-10 டெஸ்டில் மட்டுமே ஆடியிருப்பேன்.

இங்குள்ள ஆடுகளங்களில் பந்து வீசுவது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சவாலானது. மீண்டும் ஒரு முறை சுழற்பந்து வீச்சாளர்கள் தான் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. சுழற்பந்து வீச்சாளர்களுடன் சேர்ந்து எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதில் முக்கிய பங்காற்றுவேன்' என்றார்.

பயிற்சிக்கு பிறகு இந்திய தரப்பில் பேட்டி அளித்த விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் கூறும் போது, 'டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் உற்சாகமாக பேட்டிங் செய்தேன். இந்த தொடரில் இதுவரை நடந்த போட்டிகளுக்கான ஆடுகளங்கள் பேட்டிங் செய்ய முடியாத அளவுக்கு கடிமானது அல்ல. முதலில் உங்களது திறமை, தடுப்பாட்டம் மீது நீங்கள் நம்பிக்கை வைத்து விளையாட வேண்டும். அப்படி செய்தால் நிச்சயம் ரன் குவிக்கலாம்.

அஸ்வின், ரவீந்திர ஜடேஜா உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள். அவர்களது பந்து வீச்சில் விக்கெட் கீப்பிங் பணியை கவனிப்பது எளிதானது அல்ல. நிறைய உள்ளூர் முதல்தர கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக செயல்பட்டது உதவிகரமாக இருக்கிறது' என்றார்.


Next Story