இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிக்கு மிரட்டல்; காலிஸ்தான் ஆதரவு குழுவினர் கைது


இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிக்கு மிரட்டல்; காலிஸ்தான் ஆதரவு குழுவினர் கைது
x

இந்தியா-ஆஸ்திரேலியா பிரதமர்கள் ஒன்றாக பார்வையிட்ட இரு நாடுகள் பங்கேற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு மிரட்டல் விடுத்த காலிஸ்தான் ஆதரவு குழுவினர் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


ஆமதாபாத்,


குஜராத்தின் ஆமதாபாத் நகரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 4-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியை கடந்த 9-ந்தேதி பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இருவரும் ஒன்றாக அமர்ந்து நேரடியாக கண்டு களித்தனர்.

இந்த நிலையில், இந்த போட்டிக்கு மிரட்டல் விடப்பட்டது. இதுபற்றி குஜராத் குற்ற பிரிவு டி.சி.பி. சைதன்யா மந்திலிக் இன்று கூறும்போது, இரு நாட்டு பிரதமர்களும் போட்டியை காணும்போது, சிம் பாக்ஸ் தொழில் நுட்பம் உதவியுடன் மிரட்டல் விடப்பட்டு உள்ளது.

அவர்களின் இருப்பிடம் பற்றி ஆமதாபாத் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ரேவா மற்றும் சத்னா பகுதியை சேர்ந்த குழுவினர் என கண்டறியப்பட்டனர்.

எனினும், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் இருந்தும் மிரட்டல் விடப்பட்ட இடங்கள் என அறிய பெற்றது.

பாகிஸ்தானில் இருந்து பல்வேறு போலி டுவிட்டர் கணக்குகள் மூலமும் அச்சுறுத்தல்கள் விடப்பட்டன. இறுதியாக, மத்திய பிரதேசத்தில் உள்ள சத்னா மற்றும் ரேவா நகரங்களில் இருந்து சட்டவிரோத செய்தி பரிமாற்றங்கள் கண்டறியப்பட்டு உள்ளன என்று அவர் கூறினார்.

இதில், மத்திய பிரதேசத்தில் உள்ள நீதிக்காக சீக்கியர்கள் எனப்படும் எஸ்.எப்.ஜே. என்ற காலிஸ்தான் ஆதரவு குழுவினர் இந்த மிரட்டலுடன் தொடரபுடையவர்கள் என போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, அந்த அமைப்பை சேர்ந்த 2 பேரை குஜராத் போலீசின் குற்ற பிரிவினர் இன்று கைது செய்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.


Next Story