பேட்டிங்கில் எங்களது திறமையில் பாதி அளவுக்கு கூட வெளிப்படுத்தவில்லை - ரோகித் சர்மா


பேட்டிங்கில் எங்களது திறமையில் பாதி அளவுக்கு கூட வெளிப்படுத்தவில்லை - ரோகித் சர்மா
x

கோப்புப்படம்

பேட்டிங்குக்கு உகந்த அருமையான ஆடுகளம். ஆனால் நாங்கள் எங்களது திறமையில் பாதி அளவுக்கு கூட வெளிப்படுத்தவில்லை என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை துவம்சம் செய்து இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியது.

இதில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா 84 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். பின்னர் ஆடிய பெங்களூரு அணி 16.2 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் விராட்கோலி ஆட்டம் இழக்காமல் 82 ரன்னும், கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் 73 ரன்னும் விளாசினர்.

தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கருத்து தெரிவிக்கையில், 'பேட்டிங்கில் முதல் 6 ஓவர்களில் எங்களது பேட்டிங் சரியில்லை. இருப்பினும் திலக் வர்மா சிறப்பாக பேட்டிங் செய்து அணியின் ஸ்கோரை நல்ல நிலைக்கு உயர்த்தினார். நம்பிக்கையும், திறமையும் மிக்க அவர் தைரியமாக சில ஷாட்களை ஆடிய விதம் பாராட்டுக்குரியது.

இது பேட்டிங்குக்கு உகந்த அருமையான ஆடுகளம். ஆனால் நாங்கள் எங்களது திறமையில் பாதி அளவுக்கு கூட வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் சமாளித்து 171 ரன்கள் எடுத்தோம். மேலும் 30-40 ரன்கள் எடுத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். அத்துடன் எங்களது பந்து வீச்சு திட்டத்தையும் நேர்த்தியாக செயல்படுத்தவில்லை.

கடந்த 6-8 மாதங்களாக காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆட முடியாததால் அவர் இல்லாமல் (இந்திய அணிக்காகவும்) விளையாட பழகி விட்டேன். காயம் விஷயத்தில் நாம் எதையும் கட்டுப்படுத்த முடியாது. எனவே அவர் இல்லாததால் தான் பாதிப்பு என்று பேசக்கூடாது. அவரது இடத்தை மற்றொரு வீரர் நிரப்ப வேண்டியது அவசியமானதாகும். இது முதல் ஆட்டம் தான். அடுத்து வரும் ஆட்டங்களில் சிறப்பாக செயல்படுவதை எதிர்நோக்கி இருக்கிறோம்' என்றார்.


Next Story