ஐ.பி.எல். 'பிளே-ஆப்' போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தன
டிக்கெட் விற்பனை துவங்கிய 1 மணி நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.
சென்னை,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று ஆட்டம் வருகிற 21-ந் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து 'பிளே-ஆப்' சுற்று ஆட்டம் நடைபெறுகிறது. இதில் முதலாவது தகுதி சுற்று ஆட்டம் (லீக் சுற்று முடிவில் புள்ளிபட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள்) வருகிற 23-ந் தேதியும், வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் (புள்ளிபட்டியலில் 3-வது, 4-வது இடங்களை பிடிக்கும் அணிகள்) 24-ந் தேதியும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.இரண்டாவது தகுதி சுற்று ஆட்டம் 26-ந் தேதியும், இறுதிப்போட்டி 28-ந் தேதியும் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது
சென்னையில் நடைபெறும் இந்த இரண்டு பிளே-ஆப் சுற்று ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்டேடியத்தில் உள்ள கவுண்ட்டர்களில் விற்பனை செய்வதால் ஏற்படும் கூட்ட நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகளை தவிர்க்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று பகல் 12 மணி முதல் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை தொடங்கியது. ரூ.2000, ரூ.2500, ரூ.3000, ரூ.5000 என நான்கு பிரிவுகளில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதை அடுத்து, டிக்கெட் விற்பனை துவங்கிய 1 மணி நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.