சொந்த மண்ணில் ஜொலிக்கும் முனைப்பில் மும்பை: கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்


சொந்த மண்ணில் ஜொலிக்கும் முனைப்பில் மும்பை: கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்
x

இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.

மும்பை,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.

5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் 2 ஆட்டங்களில் பெங்களூரு, சென்னை அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. முந்தைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கணக்கை தொடங்காத டெல்லியை தோற்கடித்தது. அந்த ஆட்டத்தில் 173 ரன் இலக்கை கடைசி பந்தில் தட்டுத்தடுமாறி தான் எட்டிப்பிடித்தது. முதல் 2 ஆட்டங்களில் ஏமாற்றம் அளித்த கேப்டன் ரோகித் சர்மா (65 ரன்கள்) அரைசதம் அடித்தது அந்த அணிக்கு நல்ல விஷயமாகும்.

அத்துடன் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் (31 ரன்கள்), திலக் வர்மா (41 ரன்கள்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளித்தனர். டிம் டேவிட், கேமரூன் கிரீன் இறுதி கட்ட நெருக்கடியை சமாளித்து அணி வெற்றி இலக்கை கடக்க உதவினர். அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் (15, 1, 0) தொடர்ந்து சோபிக்காதது அந்த அணிக்கு பெருத்த பின்னடைவாக உள்ளது. அவரது அதிரடி வாணவேடிக்கையை மீண்டும் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கின்றனர். சொந்த மண்ணில் தனது முதல் ஆட்டத்தில் சோபிக்க தவறிய மும்பை அணி உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் ஜொலிக்கும் முனைப்புடன் களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை.

முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (பெங்களூரு, குஜராத் அணிகளுக்கு எதிராக), 2 தோல்வி (பஞ்சாப், ஐதராபாத் அணிகளிடம்) கண்டுள்ளது. அந்த அணியின் வெற்றிகளில் முறையே ஷர்துல் தாக்குர், ரிங்கு சிங் ஆகியோரின் அதிரடி முக்கிய பங்கு வகித்தது. ஐதராபாத்துக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 229 ரன் இலக்கை நோக்கி ஆடிய அந்த அணி 205 ரன்கள் எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பேட்டிங்கில் நிதிஷ் ராணா (75 ரன்கள்), ரிங்கு சிங் (58 ரன்கள்), ஜெகதீசன் (36 ரன்கள்) ஆகியோர் கலக்கினாலும் பந்து வீச்சில் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல் தவிர மற்ற பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியது அந்த அணிக்கு பாதகமாக அமைந்தது. அந்த அணி பந்து வீச்சு பலவீனத்தை சரி செய்ய வேண்டியது அவசியமானதாகும். வலுவான இரு அணிகளும் மல்லுக்கட்டும் இந்த ஆட்டத்தில் ரன் வேட்டை விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story