பாண்ட்யா அல்ல...எதிர்காலத்தில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இவர்களில் ஒருவரை நியமிக்கலாம் - இந்திய முன்னாள் வீரர்
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இந்த இரு இளம் வீரர்களில் ஒருவரை நியமிக்கலாம் என இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் ஷோப்ரா தெரிவித்துள்ளார்.
மும்பை,
இந்திய அணி கடந்த டி20 உலகக்கோப்பையில் அடைந்த தோல்விக்கு பின்னர் டி20யில் இளம் வீரரகளை கொண்ட துடிப்பான அணியை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் டி20 உலகக்கோப்பைக்கு பின்னர் இந்திய டி20 அணிக்கு கேப்டனாக பாண்ட்யாவை நியமிக்க வேண்டும் என குரல்கள் எழுந்து வருகின்றன.
பிசிசிஐயும் அதே நினைப்புடன் இருப்பது போல் டி20 உலககோப்பைக்கு பின்னர் இந்தியா விளையாடி வரும் அனைத்து டி20 போட்டிகளிலும் ரோகித், கோலியை சேர்க்காமல் இளம் வீரரகளுக்கு வாய்ப்பு அளித்து வருகிறது. மேலும் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்து சோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கு பின்னர் இந்திய ஒருநாள் அணிக்கும் கேப்டனாக பாண்ட்யாவை நியமிக்க வேண்டும் என குரல்கள் வருகின்றன. மேலும் ,கடந்த சில ஒருநாள் தொடர்களில் துணை கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலை நீக்கி விட்டு பாண்ட்யாவை துணை கேப்டனாக பிசிசிஐ நியமித்தது.
இந்நிலையில், இந்திய ஒருநாள் அணிக்கு பாண்ட்யாவை கேப்டனாக நியமிக்க வேண்டாம். அவருக்கு பதிலாக இந்த இரு இளம் வீரர்களில் ஒருவரை கேப்டனாக நியமிக்கலாம் என இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் ஷோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
அனைத்து விதமான கிரிக்கெட் அணிக்கும் ஒரே கேப்டனை பார்ப்போம் என நான் நினைக்கவில்லை. அந்த நாட்கள் முடிந்து விட்டன. ரோகித் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரை டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பார், அது மாறாது என்றார்.
ஹர்த்திக் தற்போது டி20 அணிக்கு மட்டும் கேப்டனாக இருக்கிறார். அவர் டி20 அணியின் கேப்டனாக நீண்ட காலம் தொடருவார் என நினைக்கிறேன். 2024 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக பாண்ட்யா தான் இருப்பார். ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக இந்த உலகக்கோப்பை வரை ரோகித் இருப்பார்.
ஆனால் உலகக்கோப்பைக்கு பின்னர் நீண்ட காலத்துக்கு இந்திய அணியின் கேப்டனாக இருக்க சுப்மன் கில் அல்லது ரிஷப் பண்ட் தான் இருவரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். எதிர்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக இருப்பதற்கு என்னுடைய இரண்டு வேட்பாளர்கள் இவர்கள் தான் என நான் நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.