ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 100-வது டெஸ்டில் களம் இறங்குகிறார் புஜாரா..!


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 100-வது டெஸ்டில் களம் இறங்குகிறார் புஜாரா..!
x

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 100-வது டெஸ்டில் அடியெடுத்து வைக்கிறார்.

புதுடெல்லி,

இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் நாக்பூரில் நடந்த தொடக்க டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

டெல்லியில் 2017-ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டி நடப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். 40 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட இந்த மைதானத்தில் 24 ஆயிரம் டிக்கெட் ரசிகர்களுக்கு ஒதுக்கப்பட்டு அவை அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக டெல்லி கிரிக்கெட் சங்க இணைச் செயலாளர் ராஜன் மஞ்சந்தா தெரிவித்தார்.

இந்த டெஸ்ட் இன்னொரு வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. இது இந்திய வீரர் புஜாராவுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும். இந்த மைல்கல்லை எட்டும் 13-வது இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார். ஏற்கனவே சுனில் கவாஸ்கர், கபில்தேவ், வெங்சர்க்கார், சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, கும்பிளே, ஹர்பஜன்சிங், ஷேவாக், வி.வி.எஸ்.லட்சுமண், இஷாந்த் ஷர்மா, விராட் கோலி ஆகிய இந்தியர்கள் 100 டெஸ்ட் போட்டிக்கு மேல் விளையாடியுள்ளார்.

குஜராத்தை சேர்ந்த 35 வயதான புஜாரா தடுப்பாட்டத்திற்கு பெயர் போனவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வளவு கடினமான சூழலிலும் நிலைத்து நின்று போராடுதில் கில்லாடி. எதிரணி பவுலர்களை சோர்வடையச் செய்து பலவீனப்படுத்துவதில் நிபுணர். அதனால் தான் என்னவோ குறுகிய வடிவிலான போட்டிகளில் அவரது பேட்டிங் எடுபடவில்லை. இந்திய அணிக்காக 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 51 ரன் மட்டுமே எடுத்துள்ள அவருக்கு அதன் பிறகு வெள்ளைநிற பந்து போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

டெஸ்டில் இதுவரை 99 டெஸ்டுகளில் விளையாடி 19 சதம், 34 அரைசதம் உள்பட 7,021 ரன்கள் (சராசரி 44.15) எடுத்துள்ளார். அவர் மொத்தம் 15,797 பந்துகளை சந்தித்துள்ளார்.

*புஜாரா 2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடந்த டெஸ்டில் அறிமுகம் ஆனார். அந்த டெஸ்டில் 4 மற்றும் 72 ரன்கள் வீதம் எடுத்தார்.

2017-ம் ஆண்டு ராஞ்சியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 525 பந்துகளை எதிர்கொண்டு 202 ரன்கள் குவித்தார். ஒரு இன்னிங்சில் அதிக பந்துகளை சந்தித்த இந்தியர் இவர் தான்.

2017-ம் ஆண்டில் கொல்கத்தாவில் மழை பாதிப்புக்கு இடையே நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 5 நாட்களிலும் அவர் பேட்டிங் செய்யும் (52 மற்றும் 11 ரன்) அரிய வாய்ப்பை பெற்றார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஏதாவது ஒரு வகையில் 5 நாட்களிலும் பேட்டிங் செய்த 12 வீரர்களில் ஒருவராக புஜாரா இருக்கிறார்.

2021-ம் ஆண்டில் பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அரைசதம் அடிக்க 196 பந்துகளை செலவழித்தார். அவரது மந்தமான அரைசதம் இது தான்.

*புஜாரா இதுவரை விளையாடிய 99 டெஸ்டுகளில் 57-ல் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது. 25-ல் தோல்வியும், 17-ல் டிராவும் கண்டுள்ளது.

*ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 21 டெஸ்டுகளில் 5 சதம் உள்பட 1,900 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிராக 27 டெஸ்டுகளில் 5 சதம் உள்பட 1,778 ரன்களும் எடுத்துள்ளார்.

*டெஸ்டில் செஞ்சுரி அடிக்க உள்ள புஜாரா இதுவரை ஒரு முறை கூட கேப்டன் பதவியை அலங்கரித்ததில்லை.

*2018-19-ம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி முதல்முறையாக டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சரித்திரம் படைத்தது. அந்த தொடரில் புஜாரா 3 சதம் உள்பட 521 ரன்கள் குவித்து தொடர்நாயகனாக ஜொலித்தார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

100-வது டெஸ்டில் இதுவரை எந்த இந்தியரும் சதம் அடித்ததில்லை. அந்த ஏக்கத்தை புஜாரா தணிப்பாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.


Next Story