டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ரஷித் கான்...!


டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ரஷித் கான்...!
x

Image Courtesy: Twitter 

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் உலகெங்கிலும் உள்ள டி20 தொடர்களில் ஆடி வருகிறார்

கேப்டவுன்,

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரசித் கான். உலகெங்கிலும் உள்ள டி20 தொடர்களில் ஆடி வருகிறார். இவர் தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 20 ஓவர் லீக்கில் மும்பை கேப்டவுன் அணிய்யின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 20 ஓவர் 'லீக்' கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் பிரிடோரியா கேபிடல்ஸ் அணியும் மும்பை கேப்டவுன் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய பிரிடோரியா கேப்பிடல்ஸ் 20 ஒவரில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. பின்னர் ஆடிய எம்.ஐ. கேப்டவுன் 18.1 ஓவரில் 130 ரன்னில் சுருண்டு தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் ரசித் கான் 4 ஓவர் பந்து வீசி 16 ரன் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் ஆட்டத்தின் 15வது ஓவரை வீசிய ரஷித் அதில் பார்டுனின் விக்கெட்டை வீழ்த்தினார். இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அவர் டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை ரஷித் கான் படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக டுவெய்ன் பிராவோ மட்டுமே இருந்தார். தற்போது அந்த வரிசையில் 24 வயதான ரஷித் கான் இணைந்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் பிராவோ 556 போட்டிகளில் ஆடி 614 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த படியாக ரஷித் கான் 371 போட்டிகளில் ஆடி 500 விக்கெட்டுகளுடன் 2ம் இடத்திலும், சுனில் நரைன் 435 போட்டிகளில் ஆடி 435 விக்கெட்டுகளுடன் 3ம் இடத்திலும் உள்ளனர்.




Next Story