சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை வீழ்த்தி ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை


சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை வீழ்த்தி ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை
x
தினத்தந்தி 9 Feb 2023 8:55 AM GMT (Updated: 9 Feb 2023 9:35 AM GMT)

டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 450 விக்கெட்டுகள் எடுத்த 3வது வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.

நாக்பூர்,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து செய்கிறது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் களமிறங்கினர். இருவரும் வந்த வேகத்திலேயே வெளியேறினர். கவாஜா ஒரு ரன்னில் சிராஜின் வேகத்தில் ஆட்டமிழந்தார். வார்னர் ஷமியின் பந்திவீச்சில் போல்டாகி வெளியேறியேறினார். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இரு விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணியை ஸ்மித்தும், லபுஷேனும் சரிவில் இருந்து மீட்டனர்.

சிறப்பாக விளையாடிய லபுஷேன் 49 ரன்கள் , ஸ்மித் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் மாட் ரென்ஷா ரன் எதுவும் எடுக்காமல் ஜடேஜா பந்துவீச்சில் வெளியேறினார்.

அடுத்து வந்த அலெக்ஸ் கேரி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர் அஸ்வின் பந்துவீச்சில் 36 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த பேட் கம்மின்ஸ் ௬ ரன்களில் வெளியேறினார்.

இந்த விக்கெட்டுகள் வீழ்த்தி ,அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 451 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.இதனால் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளேவுக்கு (619 விக்கெட்டுகள்) பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட் வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 450 விக்கெட்டுகள் எடுத்த 3வது வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.


Next Story