பும்ரா மீண்டும் களம் திரும்ப 6 மாதங்கள் ஆகும் என தகவல்
2023 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பும்ரா விளையாட வாய்ப்பில்லை இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகில் அழுத்தத்தினால் ஏற்பட்ட எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் கடந்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இருந்து கடைசி நேரத்தில் விலக நேரிட்டது. அவருக்கு காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. ஆபரேஷன் செய்ய வேண்டியது வரலாம். இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ கமிட்டியும், தேசிய கிரிக்கெட் அகாடமியும் ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்க உள்ளது.
இந்த நிலையில் வருகிற 31-ந்தேதி தொடங்கும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் விளையாட வாய்ப்பில்லை என்பது தெரியவந்துள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியையும் தவற விடுகிறார். அவர் மீண்டும் களம் திரும்ப 6 மாதங்கள் ஆகும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
'அக்டோபர், நவம்பர் மாதம் இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியே அவரது இலக்கு. அதுவும் உறுதி கிடையாது' என்றும் கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன. 29 வயதான பும்ரா ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.