நியூசிலாந்துக்கு எதிரான டி20: இந்திய அணி பதிலடி கொடுக்குமா? 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது


நியூசிலாந்துக்கு எதிரான டி20: இந்திய அணி பதிலடி கொடுக்குமா? 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது
x

image courtesy: BCCI twitter

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் பதிலடி கொடுக்கும் ஆர்வத்துடன் இந்திய அணி இன்று 2-வது ஆட்டத்தில் களம் காணுகிறது.

லக்னோ,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது. இதனை அடுத்து அந்த அணி 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதில் ராஞ்சியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

முதலாவது ஆட்டத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு எடுபடவில்லை. அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் வள்ளலாக மாறி 27 ரன்களை வாரி வழங்கியதால் தான் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் எதிர்பார்த்ததை விட தாண்டி 176 ரன்களை எட்டியது. அதுவே இந்திய அணியின் பாதகத்துக்கு வழிவகுத்தது. இதேபோல் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் ஒரே ஓவர் பந்து வீசி 16 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சும் கச்சிதமாக இருக்கவில்லை.

பேட்டிங்கில் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் (46 ரன்கள்), ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் (50 ரன்கள்) தவிர யாரும் சோபிக்கவில்லை. இந்திய அணியின் தொடக்கம் படுமோசமாக இருந்தது. 15 ரன்களுக்குள் டாப்-3 வீரர்களான சுப்மன் கில், இஷான் கிஷன் ஒற்றை இலக்கத்திலும், ராகுல் திரிபாதி ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். தீபக் ஹூடா உள்பட பின்வரிசை வீரர்களும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆடாததால் இந்திய அணி 155 ரன்னில் அடங்கியது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் கலக்கிய சுப்மன் கில் 20 ஓவர் போட்டியில் சொதப்புகிறார். கடந்த டிசம்பர் மாதம் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்திய இஷான் கிஷன் அதன் பிறகு 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தனது கடைசி 7 இன்னிங்சில் முறையே 37, 2, 1, 5,8 (நாட்-அவுட்) 17, 4 என்று தடுமாறி வருகிறார். இந்திய அணியின் கடைசி கட்ட பந்து வீச்சு மட்டுமின்றி, பேட்டிங்கும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

இந்திய அணியை பொறுத்தமட்டில் இந்த ஆட்டம் வாழ்வா-சாவா? போராட்டமாகும். ஏனெனில் இதில் இந்திய அணி தோற்றால் தொடரை இழப்பதுடன், 20 ஓவர் போட்டி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தையும் பறிகொடுக்க வேண்டியது வரும். எனவே இந்திய அணியினர் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரில் நீடிக்க தீவிரமாக வரிந்து கட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

நியூசிலாந்து அணியை பொறுத்தமட்டில் கடந்த ஆட்டத்தில் அரைசதம் விளாசிய டிவான் கான்வே (52 ரன்கள்), டேரில் மிட்செல் (ஆட்டம் இழக்காமல் 59 ரன்கள்), தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலென் (35 ரன்கள்) ஆகியோரையே பேட்டிங்கில் அதிகம் நம்பி இருக்கிறது. கேப்டன் மிட்செல் சான்ட்னெர், மைக்கேல் பிரேஸ்வெல், லோக்கி பெர்குசன், ஜேக்கப் டப்பி, சோதி ஆகியோர் பந்து வீச்சில் வலுசேர்க்கின்றனர்.

2012-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் 20 ஓவர் போட்டி தொடரை வெல்லாத நியூசிலாந்து அணி அந்த நீண்ட கால ஏக்கத்தை தணித்து கொள்ள எல்லா வகையிலும் போராடும். தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

லக்னோ மைதானத்தில் இதுவரை 5 சர்வதேச 20 ஓவர் போட்டிகள் நடந்து இருக்கின்றன. இதில் இந்திய அணி 2 ஆட்டங்களில் ஆடி இரண்டிலும் வெற்றி கண்டு இருக்கிறது. இதில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் அடங்கும். இங்கு நடந்துள்ள 5 இருபது ஓவர் போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றியை ருசித்து இருக்கிறது.

இதனால் இந்த ஆட்டத்தில் 'டாஸ்' முக்கிய பங்கு வகிக்கும். டாஸ் வெல்லும் அணிகள் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும். ஆட்டம் போகப்போக இந்த ஆடுகளத்தின் தன்மை மெதுவானதாக மாறும் என்றும் முதலில் வேகப்பந்து வீச்சும், போகப்போக சுழற்பந்து வீச்சும் எடுபடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: சுப்மன் கில், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், தீபக் ஹூடா, ஷிவம் மாவி, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.

நியூசிலாந்து: பின் ஆலென், டிவான் கான்வே, மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), சோதி, லோக்கி பெர்குசன், ஜேக்கப் டப்பி, பிளேர் டிக்னெர்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story