டிஎன்பிஎல்: சிலம்பரசன் அபார பந்துவீச்சு..! திருச்சி அணியை வீழ்த்தி சேப்பாக் அபார வெற்றி
சிறப்பாக பந்துவீசிய சிலம்பரசன் 5விக்கெட் வீழ்த்தினார்.
நெல்லை,
டிஎன்பிஎல் தொடரின் இறுதிகட்ட லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பால்சி திருச்சி - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய மதன் குமார் மற்றும் சந்தோஷ் ஷிவ் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இருவரும் முறையே 5 மற்றும் 16 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து, பாபா அபரஜித் 10 ரன்களிலும், சஞ்சய் யாதவ் 20 ரன்களிலும், ஜித்தேந்திர குமார் 13 ரன்களிலும், ஹரிஷ் குமார் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து சிபி 31 ரன்களில் ரன் அவுட்டானார். சசிதேவ் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி பேட்டிங் செய்தது.
சேப்பாக் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியமால் திருச்சி அணி தொடக்கம் முதல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.இதனால் 13.4 ஓவர்களில் 71 ரன்களில் 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது. சேப்பாக் அணியில் சிறப்பாக பந்துவீசிய சிலம்பரசன் 5விக்கெட் வீழ்த்தினார். சேப்பாக் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.