சென்னை அணிக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்ன ? டு பிளசிஸ் விளக்கம்
கடைசி ஐந்து ஓவர்களில் போட்டியை வெற்றிகரமாக முடிப்போம் என்று நினைத்தோம்.
பெங்களூரு,
ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்களை குவித்தது.
இதையடுத்து ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களை மட்டுமே எடுத்ததால் சென்னை அணி 8 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி தரப்பில் கான்வே 83 ரன்னும், ஷிவம் துபே 27 பந்தில் 52 ரன்னும் குவித்தனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்த பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளிசிஸ் கூறுகையில்:-
இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே நான் டைவ் அடித்ததன் காரணமாகவே பேட்டிங் செய்யும்போது என்னுடைய இடுப்பு பகுதியில் அசவுகரியத்தை உணர்ந்தேன். அதன் காரணமாகவே வயிற்றில் டேப் அணிந்து விளையாடினேன். இந்த போட்டியில் நாங்கள் மிகச் சிறப்பாகவே விளையாடினோம். கடைசி ஐந்து ஓவர்களில் போட்டியை வெற்றிகரமாக முடிப்போம் என்று நினைத்தோம்.
ஏனெனில் தினேஷ் கார்த்திக் கடைசி 5 ஓவர்களில் மிகச் சிறப்பான பினிஷிங்கை தொடர்ச்சியாக எங்களுக்கு கொடுத்து வருகிறார். அதேபோன்று போட்டியை முடித்துக் கொடுப்பது அவருக்கு எப்பொழுதும் வழக்கமான ஒன்று. இந்த போட்டியில் அது அவரால் முடியாமல் போனது. 200 ரன்கள் வரை இந்த மைதானத்தில் எளிதாக அடிக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் 200 ரன்களுக்கு மேல் வழங்கிய ரன்களே இந்த போட்டியில் எங்களுக்கு பாதகமாக அமைந்தது. என கூறினார்.