அந்த இளம் பந்துவீச்சாளரை உலகக்கோப்பையில் தேர்வு செய்யாமல் ஆசிய விளையாட்டு அணியில் ஏன் சேர்த்துள்ளீர்கள் - ஆகாஷ் சோப்ரா
அந்த இளம் பந்துவீச்சாளரை ஒருநாள் கிரிக்கெட்டில் தேர்வு செய்யாமல் ஏன் ஆசிய விளையாட்டு போட்டிக்கான அணியில் ஏன் எடுத்துள்ளீர்கள் என ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பி உள்ளார்.
மும்பை,
இந்தியாவில் வரும் அக்டோபர் -நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதே சமயத்தில் சீனாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. உலகக்கோப்பை தொடருக்கு சீனியர் வீரர்கள் இடம் பெறுவார்கள் என்பதால் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த அணிக்கு ருதுராஜ் கெய்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் துபே, திலக் வர்மா, ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளன.
இந்திய அணியில் தற்போது இடது கை வேகப்பந்து வீச்சாளராக இடம் பிடித்து வந்தவர் அர்ஷ்தீப் சிங். அவர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் இடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியதாவது,
அர்ஷ்தீப் பெயர் இந்த அணியில் (ஆசிய விளையாட்டு போட்டிகள்) இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
அவரை ஒருநாள் போட்டிகளில் தேர்வுக்குழுவினர் கணக்கில் எடுத்துக் கொள்ளாதது ஆச்சரியமாகும். சொல்லப்போனால் அவரை வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரிலும் சேர்க்கவில்லை.
அதே போல ஆசிய கோப்பை தொடரிலும் அவரை தேர்வு செய்யாத நீங்கள் உலகக் கோப்பையில் இருந்தும் வெளியே வைத்துள்ளீர்கள். அந்தளவுக்கு என்ன நடந்தது? ஏனெனில் அர்ஷ்தீப் நீண்ட காலத்திற்கு 3 வகையான கிரிக்கெட்டில் அல்லது குறைந்தபட்சம் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அசத்தக்கூடிய திறமை கொண்டவர். ஆனால் தற்போது அவர் அணியில் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.