சரிவில் இருந்து மீளுமா இந்தியா? வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 3வது டி20 போட்டி இன்று நடக்கிறது
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் சரிவில் இருந்து மீளும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று 3-வது ஆட்டத்தில் களம் இறங்குகிறது.
கயானா,
20 ஓவர் கிரிக்கெட்
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி கயானாவில் உள்ள புரோவிடென்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
முதல் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா 2-வது ஆட்டத்திலும் இதே போல நெருங்கி வந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் பணிந்தது.
நேற்று முன்தினம் நடந்த 2-வது ஆட்டத்தை எடுத்துக் கொண்டால் திலக் வர்மா (51 ரன்), கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (24 ரன் மற்றும் 3 விக்கெட்) இஷான் கிஷன் (27 ரன்) மட்டும் நன்றாக ஆடினர். சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் மறுபடியும் சொதப்பினர். மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்களே எடுத்தது. ஆனால் 160-170 ரன்கள் எடுத்திருந்தால் அது சவாலான ஸ்கோராக இருந்திருக்கும்.
பாண்ட்யாவின் தவறு
153 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் நிகோலஸ் பூரன் 40 பந்தில் 67 ரன்கள் விளாசிய போதிலும் பின்வரிசை ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகள் சீக்கிரம் சரிந்ததால் இந்தியாவுக்கு சற்று நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் 9-வது விக்கெட்டுக்கு இணைந்த அகில் ஹூசைனும் (16 ரன்), அல்ஜாரி ஜோசப்பும் (10 ரன்) 7 பந்து மீதம் வைத்து தங்கள் அணிக்கு வெற்றி தேடித்தந்தனர். இதில் இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் தவறும் இருக்கிறது. அதாவது சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் வீசிய ஆட்டத்தின் 16-வது ஓவரில் ரன்-அவுட் உள்பட 3 முன்னணி வீரர்கள் வீழ்ந்தனர். அவருக்கு மீதம் இருந்த ஒரு ஓவரை 18-வது ஓவரில் வழங்கியிருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கலாம். ஆனால் அதற்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளரை பயன்படுத்தியது சாமர்த்தியமான முடிவு அல்ல என்று முன்னாள் வீரர்கள் விமர்சித்துள்ளனர்.
தற்போது இந்திய அணியினர் சரிவில் இருந்து மீள வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க வேண்டியது தான். அதனால் இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்து தங்களது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை பறிகொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 20 ஓவர் தொடரில் வரிந்து கட்டுகிறது. அதற்கு ஏற்ப நிகோலஸ் பூரன், கேப்டன் ரோமன் பவெல், ஹெட்மயர், ஷெப்பர்டு சிறப்பாக விளையாடி வருகிறார்கள். பிரன்டன் கிங், ஜான்சன் சார்லசும் பார்முக்கு திரும்பினால் வெஸ்ட் இண்டீஸ் மேலும் வலுபெறும். இன்றைய ஆட்டத்திலும் வெஸ்ட்இண்டீஸ் வாகை சூடினால் இந்தியாவுக்கு எதிராக 7 ஆண்டுக்கு பிறகு தொடரை கைப்பற்றும்.
இரவு 8 மணிக்கு...
போட்டிக்கான இரு அணி வீரர்கள் வருமாறு:-
இந்தியா: இஷான் கிஷன், சுப்மன் கில் அல்லது ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய் அல்லது குல்தீப் யாதவ்.
வெஸ்ட் இண்டீஸ்: பிரன்டன் கிங், கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், நிகோலஸ் பூரன், ரோமன் பவெல் (கேப்டன்), ஹெட்மயர், ரொமாரியோ ஷெப்பர்டு, ஜாசன் ஹோல்டர், அகில் ஹூசைன், அல்ஜாரி ஜோசப், ஒபெட் மெக்காய்.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டி.டி. ஸ்போர்ட்ஸ் மற்றும் பொதிகை சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.