இந்திய அணியிடம் தாக்குப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்? - 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் 2-வது டெஸ்ட் இன்று தொடங்குகிறது. முந்தைய டெஸ்டில் 3 நாட்களுக்குள் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
போர்ட் ஆப் ஸ்பெயின்,
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. டொமினிகாவில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
தொடக்க டெஸ்டை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்தியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. அறிமுக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (171 ரன்), கேப்டன் ரோகித் சர்மாவின் (103 ரன்) சதத்தால் இந்தியா 421 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் பிறகு சுழல் ஜாலத்தால் வெஸ்ட் இண்டீசை புரட்டிப்போட்ட அஸ்வின் இரு இன்னிங்சையும் சேர்த்து 12 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.
இன்றைய டெஸ்டிலும் இந்தியாவின் கையே ஓங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்டில் 3 ரன்னில் ஆட்டமிழந்த துணை கேப்டன் அஜிங்யா ரஹானே, ரன் குவிப்பை எதிர்நோக்கி இருக்கிறார். ஏனெனில் இந்த போட்டிக்கு பிறகு 5 மாதங்கள் கழித்து தான் இந்தியாவுக்கு அடுத்த டெஸ்ட் போட்டி வருகிறது. எனவே தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான ஒரு இன்னிங்சை வெளிப்படுத்தும் ஆவலில் உள்ளார். இதே போல் தொடக்க டெஸ்டில் மந்தமான பேட்டிங்கால் விமர்சனத்திற்குள்ளான விராட் கோலி அதிரடி காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. அணியில் ஒரே ஒரு மாற்றம் இருக்கலாம். ஜெய்தேவ் உனட்கட்டுக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
கிரேக் பிராத்வெய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் டெஸ்டில் இரு இன்னிங்சிலும் 150 ரன்னுக்குள் அடங்கி 3-வது நாளிலேயே தோற்றுப்போனது. புதுமுக வீரர் ஆலிக் அதானேஸ் தவிர மற்றவர்களின் செயல்பாடு மெச்சும்படி இல்லை. கேப்டன் பிராத்வெய்ட், தேஜ்நரின் சந்தர்பால், ஜெர்மைன் பிளாக்வுட் உள்ளிட்டோர் கணிசமாக ரன்கள் திரட்டினால் தான் இந்தியாவுக்கு சவால் அளிக்க முடியும். இல்லாவிட்டால் வெஸ்ட் இண்டீஸ் நிலைமை திண்டாட்டம் தான். 2002-ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை தோற்கடிக்க முடியாமல் தவிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அந்த நீண்ட கால சோகத்தை தணிக்கும் வகையில் விளையாடுமா? என்பதே உள்நாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
போர்ட் ஆப் ஸ்பெயினில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. முதல் நாளில் அங்கு காலையில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. அடுத்து வரும் நாட்களிலும் மழையின் குறுக்கீடு கொஞ்சம் இருக்கலாம்.
இன்றைய டெஸ்டிலும் வாகை சூடி தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் ஆயத்தமாகி வரும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முதலாவது டெஸ்ட் நடந்த டொமினிகாவில் ஆடுகளத்தை பார்த்த போது, ஆடுகளத்தின் தன்மை எப்படி இருக்கும் என்பதை தெளிவாக அறிந்து கொண்டோம். ஆனால் இங்கு மழை குறித்து பேசிக்கொண்டு இருப்பதால், ஆடுகளம் எப்படி இருக்கும் என்பதை துல்லியமாக கணிக்க முடியவில்லை. அணியில் அதிரடியான மாற்றங்கள் இருக்காது. என்றாலும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப ஆடும் லெவன் அணியை முடிவு செய்வோம்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 100-வது டெஸ்டில் இந்திய அணியை வழிநடத்துவது கவுரவமாகும். இது அடிக்கடி நடக்கும் நிகழ்வு அல்ல. கிரிக்கெட்டில் இரு அணிக்கும் நிறைய வரலாறு உண்டு. பல சிறந்த கிரிக்கெட்டை விளையாடி உள்ளோம். வெஸ்ட் இண்டீஸ் நிச்சயம் சரிவில் இருந்து மீண்டு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். அதனால் இது இரு அணிக்கும் விறுவிறுப்பான போட்டியாக இருக்கும்.
அணியில் சீனியர் வீரர்களின் இடத்தை படிப்படியாக இளம் வீரர்கள் பிடிப்பது நடக்கக்கூடிய ஒன்று தான். அணிக்கு வரும் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு அணியில் எந்த மாதிரி பங்களிப்பு வழங்க வேண்டும் என்பதை தெளிவுப்படுத்துவது தான் மூத்த வீரர்களாகிய எங்களது முக்கிய பணியாகும். இடக்கை பேட்ஸ்மேனான இஷான் கிஷன் ஆக்ரோஷமாக விளையாடக்கூடியவர். அவருக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். முதல் டெஸ்டில் நாங்கள் முன்கூட்டியே டிக்ளேர் செய்து விட்டதால் துரதிர்ஷ்டவசமாக அவர் ஒரு ரன்னில் நின்று போனார். ஆனால் அவரது விக்கெட் கீப்பிங் பணி மிகவும் திருப்திகரமாக இருந்தது. அஸ்வின், ஜடேஜாவின் சுழன்று எகிறிய பந்துகளையும், தாழ்வாக வந்த பந்துகளையும் அருமையாக பிடித்தார்.
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
போட்டி நடக்கும் போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 13 டெஸ்டில் விளையாடி 3-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டுள்ளது. 7 டெஸ்ட் 'டிரா' ஆனது. அதே சமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கு கடைசியாக விளையாடிய 4 டெஸ்டில் (2 வெற்றி, 2 டிரா) தோற்றதில்லை என்பது கவனிக்கத்தக்கது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ரஹானே, ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷன், அஸ்வின், ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், ஜெய்தேவ் உனட்கட் அல்லது முகேஷ்குமார்.
வெஸ்ட் இண்டீஸ்: கிரேக் பிராத்வெய்ட் (கேப்டன்), தேஜ்நரின் சந்தர்பால், பிளாக்வுட், ஆலிக் அதானேஸ், ஜோஷூவா டா சில்வா, கிர்க் மெக்கென்சி, ஜாசன் ஹோல்டர், அல்ஜாரி ஜோசப், ரகீம் கார்ன்வால் அல்லது கெவின் சின்கிளேர், கெமார் ரோச், ஜோமெல் வாரிகன் அல்லது ஷனோன் கேப்ரியல்.
இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை டி.டி. ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இந்த போட்டி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடைபெறும் 100-வது டெஸ்டாகும். இதுவரை நடந்துள்ள 99 டெஸ்டில் 23-ல் இந்தியாவும், 30-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய 46 போட்டி டிராவாகியுள்ளது. குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக இந்தியா 100-வது டெஸ்டில் மோதுவது இது 3-வது முறையாகும். ஏற்கனவே ஆஸ்திரேலியா (107) மற்றும் இங்கிலாந்துக்கு (131) எதிராக இந்தியா 100 டெஸ்டுகளுக்கு மேல் விளையாடி இருக்கிறது.