பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்


பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
x

5 அணிகள் பங்கேற்கும் பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்குகிறது. இதன் முதல் லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பை,

ஐ.பி.எல். 20 ஓவர் லீக் கிரிக்கெட் போன்று பெண்களுக்கும் 20 ஓவர் போட்டியை நடத்த வேண்டும் என்று விடுக்கப்பட்ட நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து அறிவித்தது.

இதன்படி முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது. மும்பை பிரபோர்ன் ஸ்டேடியம் மற்றும் நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் ஆகிய இரு மைதானங்களில் இந்த போட்டி அரங்கேறுகிறது.

5 அணிகள் பங்கேற்பு

இந்த பெண்கள் கிரிக்கெட் திருவிழாவில் டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த அணிகளில் மொத்தம் 87 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் 30 பேர் வெளிநாட்டு வீராங்கனைகள் ஆவார்.

ஐ.பி.எல். போன்று ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 4 வீராங்கனைகள் ஆடும் லெவனில் இடம் பெற முடியும். உறுப்பு நாடுகளை சேர்ந்த வீராங்கனை அங்கம் வகித்தால் அந்த அணி 5 வெளிநாட்டு வீராங்கனைகளை களம் இறக்கலாம். அந்த வகையில் ஐ.சி.சி.உறுப்பு நாடுகளில் இருந்து ஒரே ஒரு வீராங்கனையாக அமெரிக்காவை சேர்ந்த தாரா நோரிஸ் மட்டுமே (டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி) இடம் பெற்றுள்ளார்.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2-வது, 3-வது இடம் பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் சந்திக்கும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியை எட்டும்.

முன்னணி வீராங்கனைகள்

மொத்தம் 22 ஆட்டங்கள் நடைபெறுகிறது. தினசரி ஆட்டங்கள் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். இரண்டு ஆட்டங்கள் நடைபெறும் நாளில் முதல் ஆட்டம் மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். மற்ற போட்டிகளை போன்றே நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் உண்டு. போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.10 கோடியாகும்.

ஸ்மிர்தி மந்தனா, எலிஸ் பெர்ரி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, நாட் சிவெர், ஹர்மன்பிரீத் கவுர், ஆஷ்லி கார்ட்னெர், பெத் மூனி, தீப்தி ஷர்மா, அலிசா ஹீலி போன்ற உலகின் நட்சத்திர வீராங்கனைகள் தங்களது அதிரடியின் மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவை சேர்ந்த ஹர்மன்பிரீத் கவுர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், ஸ்மிர்தி மந்தனா பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் கேப்டனாக உள்ளனர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெக் லானிங் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும், பெத் மூனி குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கும், அலிசா ஹூலி உ.பி.வாரியர்ஸ் அணிக்கும் கேப்டனாக இருக்கின்றனர்.

குஜராத்-மும்பை மோதல்

இன்றைய தொடக்க லீக் ஆட்டம் நவிமும்பையில் உள்ள டி.ஒய். பட்டீல் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் குஜராத் ஜெயன்ட்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. முன்னதாக தொடக்க விழாவையொட்டி கண்கவர் கலைநிகழ்ச்சி நடக்கிறது. இப்போதைக்கு இந்த போட்டியை காண பெண்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கான டிக்கெட் குறைந்தபட்சம் ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்றைய போட்டிக்கான இரு அணி வீராங்கனைகள் வருமாறு:-

குஜராத் ஜெயன்ட்ஸ்: பெத் மூனி (கேப்டன்), அஸ்வனி குமாரி, ஹர்லீன் தியோல், தியாந்திரா டோட்டின், சோபியா டங்லி, ஹர்லி காலா, ஆஷ்லி கார்ட்னெர், ஹேமலதா, மன்சி ஜோஷி, தனுஜா கன்வார், சபினெனி மேகனா, மோனிகா பட்டேல், சினே ராணா, ஷப்னம் ஷகில், பருனிகா சிசோடியா, அனபெல் சுதர்லேண்ட், சுஷ்மா வர்மா, ஜார்ஜியா வார்ஹாம்.

மும்பை இந்தியன்ஸ்: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), பிரியங்கா பாலா, யாஸ்திகா பாட்டியா, நீலம் பிஸ்த், ஹீதர் கிரஹாம், தாரா குஜ்ஜர், சாய்கா இஷாக், ஜிந்திமணி கலிதா, அமன்ஜோத் கவுர், ஹூமைரா காஸி, அமலியா கெர், ஹெய்லே மேத்யூஸ், நாட் சிவெர், சோலே டிரையான், பூஜா வஸ்ட்ராகர், இஸ்சி வோங், சோனம் யாதவ்.

இரவு 7.30 மணிக்கு...

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18, கலர்ஸ் தமிழ் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story