ஒருநாள் போட்டிக்கு மற்றவடிவிலான போட்டியை விட அதிக ஆல்-ரவுண்டர் தேவை - ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ்


ஒருநாள் போட்டிக்கு மற்றவடிவிலான போட்டியை விட அதிக ஆல்-ரவுண்டர் தேவை - ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ்
x

image courtesy: BCCI via ANI

ஒருநாள் போட்டிக்கு மற்றவடிவிலான போட்டியை விட அதிக ஆல்-ரவுண்டர் தேவை என்று ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

சென்னை,

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியாவின் 10 நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இந்த போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் அளித்த பேட்டியில், 'மார்கஸ் ஸ்டோனிஸ் உடல் தகுதியை எட்டுவார் என்று நம்புகிறோம். அவர் ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவாரா என்பது நாளை (இன்று) டாஸ் போடும் போது தான் தெரியும். ஒருநாள் போட்டிக்கு மற்றவடிவிலான போட்டியை விட அதிக ஆல்-ரவுண்டர் தேவை என்று நான் நினைக்கிறேன். எனவே எங்கள் அணியில் கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல் போன்ற ஆல்-ரவுண்டர்கள் இருப்பதை ஆசிர்வதிக்கப்பட்டதாக கருதுகிறேன்.

அவர்கள் தங்கம் போன்றவர்கள். அவர்களால் எங்களது பேட்டிங் வரிசை வலுவடைகிறது. எனவே நாங்கள் நல்ல நிலையில் இருப்பதாக உணருகிறோம். மிட்செல் மார்ஷ் பந்தை எளிதில் எல்லைக்கு விரட்டும் திறன் படைத்தவர். அத்துடன் நன்றாகவும் பந்து வீசக்கூடியவர். அவர் இந்த போட்டி தொடரில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நம்புகிறேன்' என்றார்.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், 'சுப்மன் கில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து விலகவில்லை. அவர் முழுமையாக குணமடைய வேண்டும் என்று விரும்புகிறேன். நல்ல உடல் திறன் கொண்ட இளம் வீரரான கில் விரைவில் குணமடைந்து விடுவார் என்று நம்புகிறேன். மற்றபடி எல்லா வீரர்களும் உடல் தகுதியுடன் இருக்கின்றனர். ஹர்திக் பாண்ட்யா நேர்த்தியான வேகப்பந்து வீச்சாளர் ஆவார். அவர் இருப்பது எங்களுக்கு கூடுதல் பலமாகும். அது நாங்கள் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடவும் வாய்ப்பளிக்கிறது.

உகந்த சூழ்நிலை நிலவினால் நாங்கள் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கவும் வாய்ப்புள்ளது. தொடர்ச்சியாக 9 லீக் ஆட்டங்களில் விளையாட இருந்தாலும் ஆடுகளத்துக்கு தகுந்தபடி அணியில் ஓரிரு மாற்றங்கள் மட்டுமே இருக்கும்' என்றார்.


Next Story