உலக கோப்பை தகுதிச் சுற்று: ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி
இலங்கை அணியில் மகேஷ் தீக்சனா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன.ஒருநாள் உலக கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் இன்று இலங்கை - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்து வீச்ச தேர்வு செய்தது.
அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டகாரர்களாக பதும் நிசங்கா - கருனரத்ணே களமிறங்கினர். கருனரத்ணே 7-ரன் எடுத்த போது அவுட் ஆனார். அடுத்து வந்த குசல் மெண்டிஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிசங்கா அரை சதம் அடித்தார். அவர் 75 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய அசலங்காவும் அரை சதம் விளாசி 63 ரன்னில் ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் எடுத்தது. ஸ்காட்லாந்து தரப்பில் கிறிஸ் க்ரீவ்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து 246 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.இறுதியில் 29 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து ஸ்காட்லாந்து 163 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இதனால் இலங்கை 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.ஸ்காட்லாந்து அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கிரீவ்ஸ் அரைசதம் அடித்தார். இலங்கை அணியில்மகேஷ் தீக்சனா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.